டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியையும் சூறையாடியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.
இதுதவிர, இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இதற்காக, தரைவழி தாக்குதலையும் முன்னெடுத்து வருகிறது.
இதில், வடக்கு காசா பகுதியில் அமைந்த பெரிய மருத்துவமனையாக உள்ள அல்-ஷிபா மருத்துவமனையையும் இலக்காக கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், மருத்துவமனைக்கு தேவையான உணவு, மருந்துகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன என இஸ்ரேல் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், காசாவின் அல்-ஷிபா மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்ட லேப்டாப்பில், பணய கைதிகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் காணப்பட்டன என இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில், சில கட்டிடங்களில் சோதனை செய்ததில், ஆயுதங்கள், அக்டோபர் 7-ந்தேதி சம்பவத்துடன் தொடர்புடைய தகவல், ராணுவ தொழில் நுட்பங்கள் மற்றும் ராணுவ சாதனம், தலைமையகங்கள் உள்ளிட்டவை பற்றிய உளவு தகவல்கள் என ஹமாஸ் அமைப்புக்கு உரிய அனைத்து வகையான தகவல்களும் இருந்தன என தெரிவித்து உள்ளது.
பணய கைதிகளாக கடத்தப்பட்டவர்களுடன் தொடர்புடைய தகவல் மற்றும் ஆவணங்களும் கணினிகளில் இருந்தன. அவற்றை சோதனைக்காகவும் மற்றும் ஆய்வுக்காகவும் அனுப்பி வைத்திருக்கிறோம் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.