`ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ நல்ல விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கேமராவும் கையுமாகச் சுற்றும் எஸ்.ஜே.சூர்யா, துப்பாக்கியும் கையுமாகச் சுற்றும் லாரன்ஸ் என இருவரும் திரையில் மிரட்டியிருக்கிறார்கள். சுவாரஸ்யமான கதைக்களத்துடன் தொடங்கி எமோஷனலாகப் படத்தை முடித்துப் பார்ப்பவர்களையும் கலங்கடித்துவிட்டார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இப்படியான பல விஷயங்கள் ஒரு புறமிருக்க, படத்தின் இறுதியில் நடிகர் இளவரசு பேசும் ‘For My Boy, Cesar’ என்கிற வசனம் பார்ப்பவர்களைத் தன்னை மறந்து கைதட்டவும் விசில் அடிக்கவும் வைத்தது.

இந்த வசனம்தான் தற்போதைய இணையதள டிரண்டிங்கும். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பல டெம்ப்ளேட்களுடன் இந்த வசனத்தை நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது ஒற்றை ஆங்கில வசனமாக இருந்தாலும் அதை எமோஷனுக்குத் தேவைப்பட்ட வகையில் வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் நடிகர் இளவரசு. அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
“`For My Boy, Cesar’ வசனத்துக்குக் கிடைச்ச வரவேற்பைக் கவனிச்சீங்களா?”
“இந்த வசனத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும்ன்னு எதிர்பார்க்கல. அது சீஸர் மற்றும் கார்மேகம் கதாபாத்திரத்திற்கு இடையே இருக்கிற சென்டிமென்ட் வசனம். இந்த வசனம் இந்த ரெண்டு கதாபாத்திரத்தோட உறவுமுறையை விளக்குறது. சீஸருக்காக கார்மேகம் ரொம்பவே உணர்ந்துப் பேசுறது மாதிரியானது இந்த வசனம். அதைப் பேசும் போது இப்படி ஏத்தி, இறக்கிப் பேசுங்கன்னு இயக்குநர் எதுவும் சொல்லல. அந்த தன்மைக்கேத்த மாதிரி பேசுறதுக்கு என்னை அனுமதித்தார். இது ஒரு நடிகருக்குக் கிடைக்கிற சுதந்திரம். அந்த வகையில இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. இது எதிர்பார்க்காத ஓர் இன்ப அதிர்ச்சிதான். தியேட்டர்ல அந்த வசனம் வரும்போது இப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு நான் எதிர்பார்க்கல. இந்தப் படம் வெற்றிப் படமாக அமையணும், நான் நடிச்ச படமெல்லாம் ஓடணும்ங்கிறதுதான் எனக்குப் பொதுவாக இருக்கிற எண்ணம். எதிர்பார்க்காத சமயத்துல அந்த வசனத்துக்கு கிடைச்ச வரவேற்பு ‘கூஸ்பம்ஸ்’தான்!”
“உங்களோட அமிதாப் மாமா கதாபாத்திரத்துக்கு அப்பறமா இந்த ‘கார்மேகம்’ கதாபாத்திரம்தான் அதிகப்படியான மீம் கன்டென்ட் ஆயிருக்கு. இந்த மீம்ஸை எல்லாம் பார்த்தீங்களா?”
“நிறைய நண்பர்கள் எனக்கு இந்த மீம்ஸ்லாம் அனுப்புவாங்க. எனக்கு ரொம்பவே திரில்லாக இருக்கும். இதுக்குத் தொடக்கப் புள்ளின்னு பார்த்தா ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ திரைப்படத்துல வர்ற மங்குனி பாண்டியன் கதாபாத்திரம்தான். அந்தப் படம் வர்றப்போ இவ்ளோ டெக்னாலஜிலாம் கிடையாது. அதுக்கு பிறகு அந்த வசனத்தை வச்சு நிறையா மீம்கள் வந்தன. அதுக்கப்புறம் அமிதாப் மாமா கதாபாத்திரத்தை வச்சு பல மீம்ஸ் இப்போ வரைக்கும் வந்துட்டு இருக்கு. நாம நடிக்கும் போது இது இப்படி வரும்ன்னு நினைச்சிருக்கவே மாட்டோம். படம் வெளியானதும் ஆடியன்ஸ் அதை இப்படி வரவேற்கிறதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு. இந்தத் தருணத்துல படமும் வெற்றிப் படமாக அமையும் போது கூடுதல் மகிழ்ச்சி.”
“‘For my Boy, Cesar’ வசனம் நாம் அதிகளவில் நேசிக்கக்கூடிய, கொண்டாடக்கூடிய ஒருவருக்குச் சொல்ற மாதிரியான எமோஷனுடன் அமைந்திருந்தது. அந்த வகையில் நீங்கள் சினிமாவில் இப்படிக் கொண்டாடக்கூடிய ஒருவருக்கு இதைச் சொல்லணும்னா யாருக்குச் சொல்லுவீங்க?”
“கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு நானே எனக்குச் சொல்லிக்க வேண்டியதுதான். நமக்குள்ள இன்னொரு ஆள் இருக்கார்ல, அவரை உற்சாகப்படுத்தணும்!”
“அருண்ராஜா காமராஜோட ‘நெஞ்சுக்கு நீதி’ படம் மாதிரியே அவரோட ‘லேபில்’ வெப்சீரிஸ்லயும் முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்துல நடிச்சிருக்கீங்க. அது பத்தி?”
“இயக்குநர் அருண்ராஜா காமராஜ் முதல்ல எனக்கு இந்த வெப் சீரிஸ்ல வேற கதாபாத்திரம்தான் சொன்னாரு. அதுக்கு பிறகுதான் இந்த போலீஸ் கதாபாத்திரத்துக்கு மாத்துனாரு. அவர் எனக்குன்னு யோசிக்கக்கூடிய ஒரு இயக்குநர். அதுனால அவர் எது சொன்னாலும் ரெடிதான். எதுக்காகக் கூப்பிட்டிருக்கார்ன்னு எங்கிட்ட கேள்வியே இருக்காது.

அவருக்குத் தெரியும் நடிகர்களை எப்படிப் பயன்படுத்தனும்னு. இந்த ‘லேபில்’ வெப் சீரிஸ் வடசென்னை மக்கள் பற்றின பார்வையை மாற்றக்கூடிய தன்மையில் உருவானதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.”
“‘எதிர்நீச்சல்’ சீரியல்ல மாரிமுத்து கதாபாத்திரத்திற்கு மாற்று நடிகராக உங்களை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்ததாகத் தகவல். அது உண்மையா?”
“இல்லை, எனக்கு யாரும் அதைப் பத்தி சொல்லல. இது சமூக வலைதளங்கள்ல வந்த செய்திதான். முன்னாடி சீரியல் ஆரம்பிக்கும் போது என்கிட்ட கேட்டாங்க. ஆனா, அது எந்தக் கதாபாத்திரத்துக்குன்னு தெரில. மாரிமுத்து இறந்ததுக்குப் பிறகு அந்த ரோல்ல நான் நடிக்கிறேன்னு சோஷியல் மீடியாலதான் அதிகமாக வந்தது. ஆனா, என்கிட்ட யாரும் கேட்கல!”