`ஹமாஸை அழிக்கிறோம்’ என்ற பெயரில் பாலஸ்தீனத்தின் காஸாவில் பொதுமக்களின்மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல், 40 நாள்களைக் கடந்துவிட்டது. இதில், முதலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன், 240 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் குழுவினரால் பணயக் கைதிகளாக்கப்பட்டதாக இஸ்ரேல் அரசு கூறுகிறது. அதைத் தொடர்ந்து, பதிலடி என்ற பெயரில் காஸாவில் அகதிகள் முகாம், மருத்துவமனைகள், குடியிருப்புப் பகுதிகள் போன்ற இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்,. கிட்டத்தட்ட 14,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதில், முக்கால்வாசி பேர் சிறுவர்களும், பெண்களும்தான்.

போரை நிறுத்துமாறு இஸ்ரேலை சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன. இருப்பினும், பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பவர்களை ஹமாஸ் விடுவிக்கும்வரை இந்தப் போர் நடந்துகொண்டே இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாகக் கூறிவந்தார். அதேசமயம், போர் நிறுத்தம் தொடர்பாகவும், பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் இரு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்தை நடத்திவந்தது கத்தார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் தற்போது முதற்கட்டமாக, 50 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸும், அதற்காக நான்கு நாள்கள் போரை நிறுத்த இஸ்ரேலும் முன்வந்திருக்கின்றன. இந்த நிலையில், காஸாமீதான போரை முழுமையாக நிறுத்தும் வரை, இஸ்ரேலுடனான தொடர்பு நிறுத்திவைப்பதாக தென் ஆப்பிரிக்கா முடிவெடுத்திருக்கிறது.
முன்னதாக, தென் ஆப்பிரிக்காவிலுள்ள இஸ்ரேலிய தூதரகத்தை மூடுவது, காஸாவில் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் உடன்படும்வரை அந்த நாட்டுடனான தொடர்பை நிறுத்திவைப்பது தொடர்பாக, எதிர்க்கட்சியான Economic Freedom Fighters கட்சி, கடந்த வாரம் தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தது.

அதைத் தொடர்ந்து, தீர்மானத்தின்மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் 248 – 91 வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், போரை நிறுத்தும்வரை இஸ்ரேலுடனான தொடர்பை தென் ஆப்பிரிக்கா நிறுத்திவைக்கும் என்று தெரியவருகிறது. இது குறித்துப் பேசிய தென் ஆப்பிரிக்க அதிபரின் செய்தித் தொடர்பாளர் வின்சென்ட் மக்வென்யா (Vincent Magwenya), “அதிபர் அலுவலகமும், அமைச்சரவையும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்துகின்றன. தேசிய நிர்வாகத்தின் பொறுப்பாக இது இருக்கிறது” என்றார்.
இன்னொருபக்கம், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கான தங்கள் நாட்டின் தூதரை இஸ்ரேல் திரும்பப் பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.