முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை: ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

சென்னை: முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், ‘முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் காமராஜ். இவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக நான் அளித்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரதாப் ஆஜாராகி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது இதே முறைகேடு தொடர்பாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டது. 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்யும் டெண்டர் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் விவரங்களை அவர்களின் முகவரியோடு வழங்குமாறு தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் கழகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

மேலும், இந்த டெண்டர்களில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற நிறுவனங்களின் தகவல்களை அளிக்குமாறு கம்பெனிகளின் பதிவாளருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் 48 டெண்டர்கள் கோரப்பட்டன. அது தொடர்பாக 24 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளன. அதனை ஆய்வு செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படும். விரிவான ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் புகாருக்கு முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்துள்ள மனு இன்னும் எண்ணிடப்படவில்லை என்று தெரிவித்து. இதனையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இரண்டு மனுக்களும் அன்றைய தினமே, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.