புதுச்சேரி: அமிர்த பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையங்களை ரூ.14.9 கோடியில் தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்ட பணிகளை மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் சிதம்பரமும், விருத்தாசலமும் குறிப்பிடத்தக்க முக்கிய நிலையங்களாகும். இந்த நகரங்களில் இருந்து ரயில் சேவை சென்னை, திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ஆகியவை திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் உள்ள அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் உள்ள நிலையங்களாகும். தற்போது இந்த ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் கூறியதாவது: ரயில்வே அம்ரித் பாரத் ஸ்டேஷன்ஸ் திட்டம் நீண்ட கால தொலைநோக்கு பார்வையுடன் நிலையங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒப்பந்தம் விடப்பட்டு, பல்வேறு உள்கட்டமைப்பு மாற்றங்களுக்கான பணிகள் ரூ. 5.97 கோடியில் சிதம்பரத்திலும், ரூ. 8.93 கோடியில் விருத்தாசலத்திலும் தொடங்கியது. இதன் மொத்த திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ.14.9 கோடி.
ரயில் நிலைய கட்டடங்கள் மேம்படுத்தப்பட்டு நுழைவு வளைவு அமைக்கப்படும். இது நிலையங்களுக்கு பிரமாண்டமான வரவேற்பு சூழலை உருவாக்கும். இயற்கை சூழலும் ரயில் நிலையங்களில் அமைக்கப்படும். இது முதல்கட்ட பணியில் அமையும். இதை வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
அடுத்தக்கட்டமாக மீதமுள்ள இரண்டு கட்ட பணிகள் தொடங்கும். அதில், சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஸ்டேஷன்களின் முன்புறம் சாலைப் பணிகள், பார்க்கிங் இடங்கள் மற்றும் பாதசாரி நடைபாதைகள், பயணிகளின் நடைபாதை மற்றும் வசதியை மேம்படுத்துதல், புதிய டிக்கெட் முன்பதிவு கவுன்டர்கள் மற்றும் காத்திருப்பு அரங்குகள் மற்றும் விஐபி லாஞ்ச் கட்டப்படும். மேம்படுத்தப்பட்ட தரைத்தளம், இருக்கை மற்றும் கழிப்பறை வசதிகளும் கட்டப்படும்.
நன்கு வடிவமைக்கப்பட்ட பயணிகளை ஆட்டோ, டாக்ஸி ஏற்றி இறக்கி செல்லும் பகுதியும் மேம்படுத்தப்படும். பயணிகள் பயன்பாட்டுக்காக புதிய கழிவறைகள் கட்டப்படும்.
ரயில் நிலைய பெஞ்சுகள், குடிநீர் வசதிகள் மற்றும் அழகியல் தன்மையுள்ள தங்குமிடங்கள் ஆகியவை பயணிகளுக்கு வசதியான மற்றும் இனிமையான அனுபவத்தை உறுதி செய்யும். போர்டிகோக்களில் நன்கு வடிவமைக்கப்பட்ட சரிவுகள் அமையும்.
நிலைய வளாகத்தில் புதிய சிக்னேஜ் போர்டுகள் மற்றும் எல்இடி டிஸ்ப்ளே போர்டுகள், பயணிகளுக்கு வழிகாட்ட அமைக்கப்படும். பயணிகளுக்கு அத்தியாவசிய பயண தகவல்களை இவை வழங்கும். ஸ்டேஷன் கட்டிடங்கள் முழுவதும் எல்.ஈ.டி விளக்குகள் பயன்படுத்தப்படும், ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் அமைப்பு செயல்படுத்தப்படும். ரயில் அட்டவணைகள், பிளாட்பார மாற்றங்கள் மற்றும் பிற முக்கியமான பயணத் தகவல்கள் பற்றிய நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்கும் என்று குறிப்பிட்டார்.