பெங்களூரு: கர்நாடக மாநில பாஜக தலைவராக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமிக்கப்பட்டது நியாயமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா அண்மையில் அம்மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். முதல் முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு அந்த பதவியை வழங்கியதற்கு மூத்த பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடக பாஜக ஒரு குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமாகிவிட்டதாக விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:”விஜயேந்திரா எடியூரப்பாவின் மகனாக பிறந்தது பெரிய குற்றமா? எடியூரப்பாவின் மகன் என்பது தற்செயல் நிகழ்வு ஆகும். அதனை மட்டும் வைத்துக்கொண்டு விஜயேந்திராவை விமர்சிப்பது நியாயமற்றது. அவர் கர்நாடக மாநிலத்தின் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அப்போது சிறப்பான முறையில் பாடுபட்டு, கட்சிக்கு நற்பெயரை ஈட்டி தந்துள்ளார்.
இதேபோல இளைஞர் பாஜகவின் தலைவராகவும் இருந்துள்ளார். அந்த சமயத்தில் விஜயேந்திரா நாடு முழுவதும் பயணித்து, மூத்த தலைவர்களுடன் பழகியுள்ளார். அந்த அனுபவத்தை பயன்படுத்தி மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெல்ல பாடுபடுவார். எனவே அவரது நியமனம் நியாயமானது தான்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.