கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி தயாரித்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில், விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஏற்பட்ட நிதிச் சிக்கல் காரணமாக, படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை. அத்துடன் படத்தை வெளியிடுவதிலும் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது. பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், நாளை (நவம்பர் 24-ம் தேதி) படம் வெளியாகும் என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில்தான், ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா தரப்பில், “சிம்பு நடிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்க 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி, 2.4 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்ட கௌதம் மேனன், படத்தையும் முடிக்கவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இத்தகைய சூழலில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், உடனடியாக எங்களுக்குத் தர வேண்டிய தொகையைத் தர வேண்டும்” என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, “துருவ நட்சத்திரம் படத்தின் விநியோக உரிமையை விற்றதன் மூலம், கெளதம் வாசுதேவ் மேனன் பணம் பெற்றிருக்கிறார். இருப்பினும், எங்களுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கவில்லை” எனக் கூறினார்.


கெளதம் வாசுதேவ் மேனன் சார்பில் வழக்கறிஞர் ரேவதி மணிவண்ணன் ஆஜராகி, “படத்தின் வெளியீட்டு தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், படத்துக்குத் தடை கோரி கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பணத்தைத் திருப்பியளிக்காமல், படத்தை வெளியிடமாட்டோம்” என உறுதியளிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி சி.சரவணன், “நாளை காலை பத்தரை மணிக்குள், 2.4 கோடி ரூபாய் பணத்தைத் திருப்பியளிக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், துருவ நட்சத்திரம் படத்தை இந்தியா, வெளிநாடுகள் என எங்கும் வெளியிடக் கூடாது” என உத்தரவிட்டார்.