சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில், கடந்த நவம்பர் 20-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி ஆஜராகி, “செந்தில் பாலாஜிக்கு இதய பிரச்னை உள்ளது. அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு தற்போது இடைக்கால ஜாமீனாவது வழங்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும், “அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. எனவேதான், இந்த மனு மருத்துவக் காரணங்களுக்காகத்தான் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அவருக்கு இருக்கும் இதயக் குழாய் அடைப்புக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என்றால், அது அவருக்கு ஆபத்தாக முடியும். குறிப்பாக, உரிய சிகிச்சை வழங்கவில்லை என்றால், அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவார்” என்று வாதிட்டார்.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “மருத்துவ அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு மருத்துவமனையில் அனுமதித்துதான் சிகிச்சை வழங்க வேண்டும் என்று எங்கும் கூறவில்லை” என்றார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “அமைச்சர் செந்தில் பாலாஜியின் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறிக்கை உள்ளிட்ட மருத்துவ அறிக்கைகள் மற்றும் சிகிச்சை தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை வரும் நவம்பர் 28-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கை, உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், `மூளைக்கான எம்.ஆர்.ஐ பரிசோதனையில், மூளையின் வலதுபுறத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் முதுகெலும்பில் வீக்கம் உள்ளது. அவருக்குப் பித்தப்பை கற்கள் இருப்பதால், நாளடைவில் உணவு உட்கொள்வதை அது குறைக்கும். இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் கால்சிய படிவு உள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.