கேரளா, மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து, இந்தியா முழுவது பசுவதைத் தடைச் சட்டம் அமலில் இருக்கிறது. இந்த சட்டத்தை உத்தரப்பிரதேசம், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், ஜார்கண்ட், யூனியன் பிரதேசமான டெல்லி ஆகிய அரசுகள் கடுமையாக பின்பற்றுகின்றன. மேலும், மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்று பெயரில் கும்பல் தாக்குதல்களும், கொலைகளும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வசீம் அகமது என்பவர் பைக்கில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக கைது செய்யப்பட்டார். அவரின் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து வசீம் அகமது அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி பங்கஜ் பாட்டியா, “உத்தரப்பிரதேச அரசின் சட்டத்தின் அடிப்படையில், பசு வதை தடுப்புச் சட்டம் மாட்டிறைச்சி கொண்டு செல்வதை தடை செய்யவில்லை. பசுவதைக் குற்றமும், மாட்டிறைச்சி கொண்டு செல்வதும் ஒன்றல்ல.
பசு வதைச் சட்டத்தின் 5A பிரிவின் கீழ், போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளில், உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்தோ, அல்லது வேறு மாநிலத்திலிருந்து உத்தரப்பிரதேசத்துக்கோ பசு, காளைகளை பலியிடும் நோக்குடன் கொண்டு செல்வதற்கு மட்டுமே இந்த தடை பொருந்தும். ஆனால், உத்தரபிரதேச மாநிலத்திற்கு வெளியே எந்த இடத்திலிருந்தும் இறைச்சியைக் கொண்டு வருவதற்கு முழு சட்டத்திலோ அல்லது விதிகளிலோ தடுப்பதற்கான எந்த விதியும் இல்லை.

தற்போதைய வழக்கில், மாநிலத்தில் இரண்டு இடங்களுக்குள் வாகனத்தில் (மோட்டார் சைக்கிள்) மாட்டிறைச்சி கொண்டு செல்லப்படுவது தடைசெய்யப்படவில்லை அல்லது ஒழுங்குபடுத்தப்படவில்லை. எனவே, இந்தச் சட்டத்தின் விதிகளை மீறி போக்குவரத்துக் குற்றச்சாட்டில் வாகனத்தைப் பறிமுதல் செய்வதற்கான அடித்தளமும் இல்லை. எனவே, பசு வதைச் சட்டத்தின் 5A(7) பிரிவை தவறாக, சட்டத்தின் எந்த அதிகாரமும் இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. எனவே, இந்த வழக்கு ரத்து செய்யப்பட வேண்டும்,” எனத் உத்தரவிட்டிருக்கிறார்.
இதற்கு முன்னர், மாட்டிறைச்சி விற்பனை செய்ததாக ரஹ்முதீன் என்பவர் ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அலகாபாத் நீதிமன்ற நீதிபதி சித்தார்த், “உத்தரப்பிரதேச பசுவதைச் சட்டம், அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்படுவது கவலையளிக்கிறது. அப்பாவி மக்களை சிக்கவைக்க இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில், அதிகாரிகளால் மீட்கப்பட்ட இறைச்சி எந்த பகுப்பாய்வும், உறுதிப்படுத்தலும் இல்லாமல் மாட்டிறைச்சி என்று புனையப்படுகிறது.

இதுபோன்ற பல வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்யப்படாத குற்றத்திற்காக தொடர்ந்து சிறையில் வாடுகின்றனர். ஆனால் பலர், பால் கறக்காத மாடுகளையும், வயதான மாடுகளையும் பசு காப்பகங்கள் கூட ஏற்றுக்கொள்ளாத நிலையில், சாலைகளில் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். அந்த மாடுகள் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.
கிராமப்புறங்களில் கால்நடைகளுக்கு உணவளிக்க முடியாத கால்நடை உரிமையாளர்கள், உள்ளூர் பசு பாதுகாவலர்கள், மற்றும் காவல்துறைக்கு பயந்து வெளி மாநிலத்துக்குக் கூட கொண்டு செல்ல முடியாத நிலையில் அவற்றை கைவிட்டு விடுகின்றனர். அதனால், மேய்ச்சல் நிலங்கள் இல்லாததால், அவை பயிர்களை நாசம் செய்கின்றன” எனக் குறிப்பிட்டிருந்தார்.

உத்தரப் பிரதேச பசுக் வதை தடுப்புச் சட்டம், 1955 ஜனவரி 6, 1956-ல் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, நான்குமுறை திருத்தம் செய்யப்பட்ட இந்த சட்டம் இறுதியாக 2002-ம் ஆண்டுகளில் திருத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் உத்தரபிரதேச அமைச்சரவை பசு வதை செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமாக உயர்த்தும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.