“பாஜக குறைவாகவா விமர்சித்துள்ளது?” – தேர்தல் ஆணைய நோட்டீஸ் விவகாரத்தில் ராகுலுக்கு ஆதரவாக சுப்ரியா சுலே கேள்வி

புனே: காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி ஒரு போராளி; பிரதமருக்கு எதிராக அவதூறு பேசியதாக தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு அவர் நேர்மையாகவும், கண்ணியமாகவும் பதில் அளிப்பார் என்று தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) எம்பி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். மேலும் பாஜக குறைவாகவா விமர்சித்துள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சுப்ரியா சுலே கூறியாதவாது, “ராகுல் காந்தி ஒரு நேர்மையான, வலிமையான தலைவர். அவர் கண்ணியமான மற்றும் நேர்மையான பதிலை அளிப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு போராளி. அவர் நேர்மையானவர் என்பதால் அச்சம்கொள்ளத் தேவையில்லை. ராகுலின் பாட்டனார் ஜவஹர்லால் நேரு, பாட்டி இந்திரா காந்தி உள்ளிட்ட ராகுல் காந்தியின் குடும்பத்தினருக்கு எதிராக பாஜக பல முறை பேசியுள்ளது. ஆகையால் இப்போது ராகுல் சில விசயங்களைப் பேசும்போது மட்டும் ஏன் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டும். பாஜக குறைவாகவா விமர்சித்துள்ளது?” என்று தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (நவ.25) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் நவ.22-ம் தேதி நடந்த இரண்டு வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடி குறித்து தவறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ‘பிரதமர் மோடி, தொழிலதிபர் அதானி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிக்பாக்கெட் கும்பலை சேர்ந்தவர்கள். அபசகுனம் பிடித்த பிரதமர் மோடி பார்க்கச் சென்றதால்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. கடந்த 9 ஆண்டுகளில் 15 தொழிலதிபர்களின் ரூ.14 லட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்துள்ளார்’ என்று, அவதூறு ஏற்படுத்தும் வகையில் 3 பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ராகுல் காந்திக்கு தலைமை தேர்தல் ஆணையம் நவ.23-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அதில்,”பிரதமர் மோடி குறித்த உங்கள் (ராகுல் காந்தி) கருத்து தேர்தல் நடத்தை விதிமீறல். பிரச்சாரத்தின்போது வேட்பாளர்கள், கட்சிகள் குறித்து அவதூறாக பேசக்கூடாது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்த கூடாது என்று நடத்தை விதிகளில் கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது. சுப்பிரமணியன் சுவாமி – மத்தியஅரசு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, டிடிவி தினகரன் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆகியவற்றை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். உங்கள் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக நவ.25 மாலை 6 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆணையம் நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.