குய்கோ விமர்சனம்: யோகி பாபு – விதார்த் கூட்டணி; சிறுகதை கன்டன்ட் ஃபீல் குட் சினிமாவாக மாறியதா?

யோகி பாபு, விதார்த்த, இளவரசு எனப் பலர் நடிப்பில் அருள் செழியன் இயக்கியிருக்கும் படம் `குய்கோ’.

சவுதியில் அரசர் வீட்டு ஒட்டகங்களை மேய்த்து பராமரித்து வருகிறார், மலையப்பன் (யோகிபாபு). தனது தாயின் இறப்புச் செய்தி கேட்டவுடன், சொந்த ஊரான அழகுமலைக்குத் திரும்புகிறார். தான் வந்து சேரும் வரை துக்க வீட்டில் இருக்கும் எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கால்குலேட்டர் சண்முகத்திடம் (இளவரசு) கொடுக்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, சென்னைக்கு சென்று ஐ.பி.எல் போட்டியைக் காண தனது கந்துவட்டி மாமன் பண்பழகனிடம் (முத்துக்குமார்) காசு கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்கிறார் டுடோரியல் கணக்கு டீச்சரான தங்கராஜ் (விதார்த்).

அந்த சமயம் பார்த்து, ஃப்ரீசர் பாக்ஸ் வாடகைக்கு கேட்டு இளவரசு முத்துக்குமாரிடம் வர, அதை பொருத்திக் கொடுத்துவிட்டு வரும்படி விதார்த்துக்கு அசைன்மென்ட் கொடுக்கப்படுகிறது. அழகுமலைக்கு சென்ற விதார்த் சில பல காரணங்களால் அங்கேயே தங்க நேர்கிறது. சவுதியிலிருந்து யோகிபாபு வந்த பின்பு என்னவாகிறது, விதார்த் அந்தக் கிராமத்திலிருந்து கிளம்பினாரா என்பதை கிராமத்துக் கதையாக சொல்ல முயற்சித்திருக்கிறார், அறிமுக இயக்குநர் டி.அருள்செழியன். 

குய்கோ

மலையப்பனாக வரும் யோகி பாபுதான் படத்தின் நாயகன். தன் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டியிருக்கிறதோ அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். அவருடைய ட்ரேட்மார்க் ஒன் லைனர்கள் ஆங்காங்கே வொர்க்காகி இருக்கின்றன. அவர் கரியரில் மற்றுமொரு படம், அவ்வளவே. விதார்த் கதாபாத்திரம் மிகவும் சாதாரணமாக எழுதப்பட்டிருக்கிறது. அவர் நடிப்புக்கான தீனி கொடுக்கவில்லை என்றால் பரவாயில்லை; காட்டவேயில்லை. பிரியங்கா, துர்கா என இரு நாயகிகள். கிராமத்து முகங்களாக பொருந்தி இருக்கிறார்கள். ஆனால், அவர்களது கதாபாத்திரம் அழுத்தமாக இல்லை. இளவரசு, முத்துக்குமார், வினோதினி வைத்தியநாதன் என படத்தில் பலரும் தேர்ந்த குணசத்திர நடிகர்கள். ஆனால், அவர்களது கதாபாத்திரங்கள் அழுத்தமாக இல்லாதது மைனஸ். 

திரைக்கதையில் ஒரு ஏற்றமோ இறக்கமோ இல்லாமல் படம் முடியும்வரை எந்தவொரு உணர்வும் கடத்தப்படாமல் தட்டையாகவே இருப்பது பெரிய குறை. இயக்குநர் இதில் மெனக்கெட்டிருக்கலாம். படத்தின் ப்ளஸ் என்பது வசனங்கள் தான். ‘ஆடு மேய்க்கிறவரையே ஆண்டவரா ஏத்துக்கிட்டாங்க. மாடு மேய்க்கிறவனை மாப்பிள்ளையா ஏத்துக்கமாட்டியா?’, ‘வட மாநிலத்துல இருந்து வந்து எதை கத்துக்கிட்டாங்களோ இல்லையோ அண்ணான்னு கூப்பிட கத்துக்கிட்டாங்க’, ‘பேரு கேட்டா அந்தோணி சாமினு சொல்றான். சபரிமலைக்கு மாலை போட்டிருக்கான்’ – ‘யேசுதாஸ் கூடதான் 40 வருஷமா சபரிமலைக்கு போயிக்கிட்டிருக்கார்’ போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. தவிர, ஜி.எஸ்.டி, ரெய்டு, அமைச்சர் சேகர்பாபு என சமகால அரசியலை வைத்து சில கவுன்ட்டர்களும் இருக்கின்றன. உணர்வுப்பூர்வமான காட்சிகள் அமைக்க இடமிருந்தது. அதை அழுத்தமாக காட்சிப்படுத்தபடுத்தியிருந்தால் நிச்சயம் கவனம் பெற்றிருக்கும்.

குய்கோ

படத்தின் மையமே அந்த ஃப்ரீசர் பாக்ஸுக்கும் யோகிபாபுவுக்குமான காட்சிதான். ஆனால், அந்த உணர்வு கடத்தப்படாமல் மேலோட்டமான வசனத்தாலும் பின்னணி இசையாலும்  மட்டுமே கடந்து செல்கிறது. யோகிபாபு ஜாலியான கவுன்ட்டர்கள் அடிக்கிறார், திடீரென்று ‘என் அம்மாவை நான் கடைசி காலத்துல பார்த்துக்காம விட்டுட்டேன்’ என சீரியஸ் மோடுக்குச் செல்கிறார். தாய் மீது அவ்வளவு பாசம் வைத்திருக்கும் மகன், அவர் இறப்புக்கு ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாதது வியப்பு!

அந்தோணி தாசனின் இசையில் வரும் பாடல்கள், பின்னணி இசையும் ஓகே ரகம்தான். பெரிதாக ஈர்க்கவில்லை. ஷாருக் கானின் ‘தும் பாஸு ஆயே’ பாடலை தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் மலை கிராமத்தை இன்னும் அழகாகக் காட்டியிருக்கலாம். ஊருக்கு பெயரே அழகுமலை. ஆனால், அதனை காட்சிப்படுத்தத் தவறியிருக்கிறார்கள். திரைக்கதையில் சுவாரஸ்யம் இருந்தால், அதை எடிட்டிங்கில் இன்னும் மெறுகேற்றலாம். அங்கு இல்லையென்றால், இங்கு என்ன செய்யமுடியும். இருந்தும், ராம் பாண்டியனின் படத்தொகுப்பு கதையை சுவாரஸ்யப்படுத்த முயற்சித்திருக்கிறது.

ஃபீல் குட் சிறுகதை கன்டென்டை ஃபீட் குட் சினிமாவாக மாற்ற முயற்சித்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுகள். ஆனால், அந்த முயற்சி பயனளிக்காதது வருத்தமே ! 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.