மதுரை: மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த அமமுக முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக அதிமுகவில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அமுமுக கூடாரத்தை அதிமுக அசைத்துப்பார்த்து வருவதால் டிடிவி.தினகரன், இதற்கு என்ன எதிர்வினை ஆற்றப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுகவில் சசிகலா, டிடிவி.தினகரன் இருவரும் கட்சியையும், ஆட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உடனடியாக கொண்டு வந்தனர். அதன்பிறகு அவர்கள் முதலமைச்சராக நியமித்த கே.பழனிசாமிக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படவே அதிமுகவை கே.பழனிசாமி தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அதிமுகவின் பொதுச்செயலாளரான கே.பழனிசாமி ஆனபிறகு சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் போன்றோரை கட்சியை விட்டே நீக்கினார். டிடிவி.தினகரன், மதுரை மாவட்டம் மேலூரில் அமமுக என்ற தனிக்கட்சி தொடங்கி ஒரளவு சிறப்பாகவே செயல்பட்டார். தென் மாவட்டங்களில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக பெற்ற வாக்கு வங்கி, அதிமுக ஆட்சியை பிடிக்காமல் போனதிற்கு முக்கிய காரணமாக பேசப்பட்டது.
அமமுக கட்சியில் தற்போது அதிமுக, திமுகவில் உள்ள முக்கிய முன்னாள் அமைச்சர்கள் பலர் இருந்தனர். காலப்போக்கில், டிடிவி.தினகரனின் அரசியல் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டதோடு தொடர் தோல்விகளால் அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக திமுக, அதிமுக பக்கம் தாவினர். அமமுகவிற்கு பலமே, தென் மாவட்டத்தின் நிர்வாகிகள்தான். அவர்களில் ஏற்கனவே கட்சி தொடங்கியபோது டிடிவி.தினகரனுக்கு பக்க பலமாக இருந்த மேலூர் முன்னாள் எம்எல்ஏ சாமி, உடல்நலகுறைவால் மரணடைந்தார். அவருக்கு பிறகும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.மகேந்திரன், டேவிட் அண்ணாத்துரை போன்றவர்கள் அமமுகவை சிற்பபாகவே வழிநடத்திக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தொடர் தேர்தல் தோல்விகளால் நிர்வாகிகளால் கட்சியை தொடர்ந்து நடத்துவதற்கான செலவினங்களை சமாளிக்க முடியவில்லை. தோல்விகளால் உற்சாகமில்லாமல் துவண்டுபோய்விட்டனர். அதிமுக சின்னமும், பெரும்பாலான நிர்வாகிகளும் கே.பழனிசாமி பக்கமே இருப்பதால் மதுரை மாவட்ட அமமுக முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக கடந்த சில நாட்களாக அதிமுகவில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
சமீபத்தில் அமுகவின் முக்கிய நிர்வாகி முன்னாள் எம்எல்ஏ இ.மகேந்திரன், அதிமுகவில் கே.பழனிசாமி தலைமையில் இணைந்தார். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அமுமுக நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.டி.ராஜா, எழுமலை பேரூர் செலயாளர் பக்ரூதீன், உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், சேடப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், நடுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்னன், மாவட்ட பாசறை செயலாளர் சுமதி ஸ்ரீ, மாவட்ட மகளிரணி தலைவி சுமதிமதி, கள்ளிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், உசிலம்பட்டி நகர் ஜெ., பேரவை செயலாளர் உக்கிரபாண்டியன், கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதுபோல், தேனி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் ஆர்.ஜெயக்குமார், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் அனுமந்தன், மாவட்ட துணைச் செயலாளர் டி.பாலச்சந்திரன், ஆண்டிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், பெரிய குளம் நகர செயலாளர் செல்லபாண்டி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் மோகன்குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் செல்வம் மற்றும் பலர் கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த இணைப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்பி.உதயகுமார் செய்திருந்தனர். இதபோல், மற்ற மாவட்டங்களளை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுகவிற்கு தாவி வரும்நிலையில் அமமுக கூடாரத்தை அதிமுக அசைத்துப்பார்க்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது முன்னாள் அமைச்சர் காளிமுத்து மகன் டேவிட் அண்ணாத்துரை மட்டுமே மதுரை மாவட்டத்தில் டிடிவி.தினகரனின் நம்பிக்கை்கு பாத்திரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமமுக நிர்வாகிகளை தொடர்ந்து தொடர்ந்து அதிமுகவிற்கு செல்வதை தடுக்கவும், தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை தக்கவைக்கவும் டிடிவி.தினகரன் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.