தெலங்கானாவில் இறுதிக்கட்ட பிரச்சாரம்: பிரதமர் மோடி, அமித் ஷா, கார்கே, ராகுல், பிரியங்கா காந்தி பங்கேற்பு

ஹைதராபாத்: தெலங்கானாவில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.நேற்றைய பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 28-ம் தேதி மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய உள்ள காரணத்தினால் பாஜக, காங்கிரஸ், பிஆர்எஸ், ஜனசேனா, ஏஐஎம்ஐஎம் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காமாரெட்டி பகுதியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:

பிஆர்எஸ் கட்சியின் மோசமான ஆட்சியால் மக்கள் சோர்ந்து போய் விட்டனர். இதேபோன்று தான் காங்கிரஸும். அவர்களும் 7 தலைமுறைகளாக ஆட்சி செய்துள்ளனர். ஆதலால் தெலங்கானா மக்கள் ஒரு அரசியல்மாற்றத்தை இங்கு விரும்புகிறார்கள். தெலங்கானாவில் பாஜக அலை வீசுகிறது. பாஜக எதை சொல்லுமோ அதனை செய்து காட்டும் கட்சியாகும். பாஜகவுக்கு வாக்களித்து தெலங்கானாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

போதன் உள்ளிட்ட பகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பேசும்போது, “தெலங்கானாவில் லேண்ட் (நிலம்) சாண்ட்(மணல்) ஒயின் (மது) மாஃபியா அதிகரித்து விட்டது. இந்த பணம் எல்லாம் முதல்வர் சந்திரசேகர ராவின் வீட்டுக்கே சென்றுள்ளது. குடும்ப, ஊழல் ஆட்சியால் தெலங்கானா கடந்த 10 ஆண்டுகளில் சீரழிந்து விட்டது” என்றார்.

காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே பேசும்போது, ‘‘ஏழைகளின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம்போடுவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் செய்யவில்லை. முதல்வர் கேசிஆர், பாஜகவுடன் ரகசிய கூட்டணியில் உள்ளார். இருவரும் மக்கள் முன் பொய்களை வாரி இறைப்பவர்களே. ஆதலால் காங்கிரஸை ஆதரியுங்கள்’’ என்றார்.

தெலுங்கில் பேசிய பிரியங்கா: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்றைய பிரச்சாரத்தில் தெலுங்கில் பேசினார். அதை கேட்டு மக்கள் ஆரவாரம் செய்தனர்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேமுலவாடா பகுதியில் பிரச்சாரம் செய்தார். அவர் பேசும்போது, ‘‘ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு பயந்துதான் முதல்வர் சந்திரசேகர ராவ், ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்த நாளைகொண்டாடுவதில்லை. சந்திரசேகர ராவின் சின்னம் கார். அந்த காரின் கட்டுப்பாடு, அசாதுதீன் ஓவைஸி கையில் உள்ளது” என்றார்

ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘‘பிஆர்எஸ்.கட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். ஹைதராபாத் வெளிப்புற சுற்று வட்டார சாலை ஒப்பந்தம் மற்றும் காலேஸ்வரம் அணை கட்டு நிதி என இரண்டிலும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.