மதுரை: மதுரையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.50ஐ தொட்டது.
தக்காளி விலை கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிட்ட தக்காளிகள் மழையால் அழிந்ததே இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. அதன்பிறகு வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு தக்காளி கொண்டு வரப்பட்டும், உள்ளூர் தக்காளி விற்பனைக்கு வந்ததை அடுத்தும் விலை குறையத் தொடங்கியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் அதிகப்பட்சம் கிலோ ரூ.15 வரை மட்டுமே விற்பனையானது.
இந்நிலையில் தக்காளி விலை திடீரென்று உயர ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை உயர்ந்தது. நேற்று இந்த விலை இன்னும் அதிகரித்து கிலோ ரூ.50 வரை விற்பனையானது. மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.200 முதல் ரூ.450 வரை விற்பனையானது.
சில்லறை விற்பனையில் ரூ.40 வரை விற்பனையானது. தள்ளுவண்டிகள், மளிகை கடைகள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் கிலோ ரூ.50க்கு தக்காளி விற்பனையானது. தொடரும் தக்காளி விலை உயர்வால் மீண்டும் விலை பல மடங்கு அதிகரிக்குமா? என மக்கள் கவலையடைந்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால் தக்காளி அழுகிவிடுவதாகவும், இதன் காரணமாக விலை உயர்ந்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.