புதுடெல்லி: மூன்று மெகா பாதுகாப்பு திட்டங்களை ரூ.1.4 லட்சம் கோடியில் செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது.
அதன்படி, மேலும் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல், 978 தேஜாஸ் போர் விமானங்கள், 156 பிரசாந்த் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் மூன்று மெகா உள்நாட்டு திட்டங்களுக்கு முதல் கட்ட அனுமதி வழங்கப்படவுள்ளது. இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.1.4 லட்சம் கோடியாகும்.
நவம்பர் 30-ம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறவுள்ள பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கவுன்சில் கூட்டத்தில் மூன்று மெகா திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் அடுத்தகட்டமாக பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழுவிடம் அனுமதி கோரப்படும். அதற்கு முன்னதாக,டெண்டர் மற்றும் வணிகப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மெகா திட்டங்களை செயல்படுத்துவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும். எனினும், சீனா தனது போர்த் திறனை விரிவுபடுத்தி வருவதன் பின்னணியில் இந்திய ராணுவத்தின் தயார் நிலையை வலுப்படுத்துவதற்கு இந்த திட்டங்கள் மிக முக்கியமானது என்று கூறப்பட்டுள்ளது.
தேஜாஸ் விமானங்கள்: 97 தேஜாஸ் மார்க் -1ஏ போர் விமானங்கள் தயாரிப்புக்கு ரூ.55,000 கோடி ஒதுக்கப்படும். கடந்த 2021 பிப்ரவரியில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் உடன் ரூ.46,898 கோடிக்கு ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்ட 83 ஜெட் விமானங்களுடன் இந்த 97 விமானங்களும் சேர்த்துக் கொள்ளப்படும். மேலும் அவற்றின் மொத்த எண்ணிக்கை 180-ஐ தொடும்.
அதேபோன்று, ரூ.40,000 கோடி செலவில் கொச்சின் ஷிப்யார்டில் 44,000 டன் எடையுள்ள இரண்டாவது விமானம் தாங்கி கப்பலைகட்டுவதற்கு ஆர்டர் கொடுக்கப்படும். இப்பணிகள் நிறைவடைய 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம்.
மேலும், ரூ.16,000 கோடி மதிப்பில் மிக்-29 கே ரக போர் விமானங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்கவும், பிரான்சிடமிருந்து ரூ.50,000 கோடி மதிப்பில் 26 ரஃபேல்-மரைன் போர் விமானங்களை வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறையை சேர்ந்த உயரதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.