டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறங்கி உள்ளது. அப்பகுதியில், பக்கவாட்டில் துளையிட்ட ஆகர் இயந்திரம் பழுதடைந்ததால், செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கி உள்ளது.
உத்தராகண்டில் சில்க்யாரா – பர்கோட் இடையே அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில்,41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதற்காக, அமெரிக்க தயாரிப்பான ஆகர் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிடப்பட்டது. ஆனால், அந்த இயந்திரத்தின் பிளேடு, கம்பிகளில் சிக்கி உடைந்து சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டது. இதனால், அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பக்கவாட்டில் துளையிடும் முயற்சி கைவிடப்பட்டது.
அதற்கு பதிலாக, சுரங்கத்தின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிட்டு, தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டது. செங்குத்தாக துளையிடும் பணிநேற்று மதியம் தொடங்கியது.
25 டன் இயந்திரம்: இதற்கிடையே, பழுதடைந்த 25 டன் எடை கொண்ட ஆகர் இயந்திரத்தை பிளாஸ்மா இயந்திரம் மூலம் வெட்டி வெளியே இழுக்கும் பணி நடந்து வருகிறது. இந்தபணி முடிந்ததும், ஏற்கெனவே பக்கவாட்டில் 47 மீட்டர் தூரம்துளையிடப்பட்டு குழாய் பொருத்தப்பட்டுள்ள பகுதியில், இயந்திரங்களை பயன்படுத்தாமல், ஒவ்வொருவராக ஆட்களை அனுப்பி துளையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்காக மெட்ராஸ் சாப்பர்ஸ், ராணுவ பொறியாளர் படையை சேர்ந்த பொறியாளர் குழு சம்பவ இடத்துக்கு நேற்று வந்துள்ளது. உள்ளே சிக்கிய தொழிலாளர்களை சென்றடைய இன்னும் 15 மீட்டர்தூரம் துளையிட வேண்டும்.
மீட்பு பணியை விரைவுபடுத்தும் வகையில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) உபகரணங்களுடன் விமானப் படை வீரர்களும் வந்துள்ளனர்.
‘நீண்ட நாட்கள் ஆகும்’: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சையது அடா ஹஸ்னைன் கூறும்போது, “தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை முடிவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். மலைப் பகுதி என்பதால் எதையும் முன்கூட்டி கணிக்க முடியாது. காலக்கெடுவை நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கி உள்ளது. 86 மீட்டர் ஆழத்தில் சுரங்கப் பாதை உள்ளநிலையில், இதுவரை 15 மீட்டர் ஆழத்துக்கு செங்குத்தாக துளையிடப்பட்டுள்ளது” என்றார்.
தொழிலாளர்களை மீட்க 6 திட்டங்கள்: தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் மமூத் அகமது கூறும்போது, ‘‘செங்குத்தாக துளையிடும் பணி திட்டமிட்டபடி நடந்தால், தொழிலாளர்கள் 4 நாட்களில் மீட்கப்படுவார்கள். ஏற்கெனவே பக்கவாட்டில் துளையிட்ட பகுதியில் ஆட்களை கொண்டு தோண்ட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மொத்தம் 6 திட்டங்கள் உள்ளன. இதுகுறித்து பரிசீலித்து வருகிறோம்’’ என்றார்.
சுரங்கத்தில் 41 தொழிலாளர்களும் கடந்த 360 மணி நேரத்துக்கு மேலாக (15 நாட்கள்) சிக்கி உள்ளனர். அவர்களுக்கு ஆக்சிஜன், ஒளி, உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என அதிகாரிகள் கூறினர். தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, சுரங்கப் பாதைக்கு வெளியே41 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.