சண்டிகர்: கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப்மாநிலத்துக்கு வருகை தந்தபோது,
அவரது வாகனம் வந்துகொண்டிருந்த சாலையை மறித்து விவசாயிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த பாதுகாப்பு குறைபாடுக்கு காரணமாக இருந்ததாக, பஞ்சாப் மாநில காவல் துறை அதிகாரிகள் 7 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி விமானம் மூலம் பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு ஹெலிகாப்டரை தவிர்த்து காரில் செல்ல முடிவு செய்யப்பட்டது.
அந்த சமயத்தில் விவசாயிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரதமர் வாகனம் வந்து கொண்டிருந்த சாலையை மறித்து சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் பிரதமர் மோடி வந்த வாகனம் அங்குள்ள மேம்பாலத்தி்லேயே 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. அப்போதும் கூட அவர்களை அப்புறப்டுத்த பஞ்சாப் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, அன்று நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமலேயே பிரதமர் மோடி விமான நிலையம் திரும்பினார். போதுமான பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்படாததால் பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த குளறுபடியால் பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவியதாகநாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரிக்க விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
சில காவல் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்தப்பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று அக்குழு அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில் பிரதமர் வருகையின்போது நடந்த பாதுகாப்பு குறைபாட்டுக்கு கராணமாக இருந்ததாக, எஸ்.பி. குர்பிந்தர்சிங், டிஎஸ்பி பர்சன் சிங் மற்றும் ஜெகதீஷ் குமார், ஆய்வாளர்கள் ஜதினந்தர் சிங், பல்விந்தர் சிங், உதவி ஆய்வாளர் ஜஸ்வந்த் சிங், துணை உதவி ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகிய 7 காவல் துறை அதிகாரிகளை பஞ்சாப் மாநில அரசு பணி இடைநீக்கம் செய்துள்ளது.