ஜெய்ப்பூர்: ஆட்சி மீதான நல்லெண்ணம் மற்றும் முதல்வருக்கு இருக்கும் செல்வாக்கு ஆகிய இரண்டும் காங்கிரஸுக்கு சாதகம் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 25ம் தேதி நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரின் திடீர் மறைவு காரணமாக, மொத்தமுள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு அன்றைய தினம் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 70 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் 1,862 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட உள்ளன.
ராஜஸ்தானில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஆட்சி மாறுவது வழக்கம். கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி மாற்றம்தான் வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆனால், இந்த முறை ஆட்சியை தக்கவைப்போம் என காங்கிரஸ் நம்புகிறது. ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என பாஜக கூறி வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “ராஜஸ்தானில் ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்று பல்வேறு நிபுணர்கள் கூறி இருக்கிறார்கள். அதேபோல், முதல்வரின் செல்வாக்கு அபிரிமிதமாக இருப்பதாகவும் அவர்கள் கூறி இருக்கிறார்கள். இந்த இரண்டு அம்சங்களும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமானவை. எனவே, காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்காது என கூறுவதற்கு வாய்ப்பே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.