IND vs AUS: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தானை முந்தியது இந்தியா… என்ன விஷயம் தெரியுமா?

India National Cricket Team: இந்திய அணி ஒருநாள் போட்டிக்கான ஆடவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் (ICC World Cup 2023) ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து சரியாக ஒரு வாரம் நேற்றோடு கழிந்த நிலையில், இந்திய அணி அதனை மறக்க வைக்க அடுத்தடுத்து 2 வெற்றிகளை அதுவும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவே படைத்துள்ளது எனலாம். உலகக் கோப்பைக்கு பின் இந்தியாவில் 5 டி20 போட்டிகளை விளையாட ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

அதில் முதல் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த ஏப். 23ஆம் தேதி நடைபெற்றது. அதில் இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை வெற்றியுடன் தொடங்கியது. அந்த வகையில் தொடரின் இரண்டாவது போட்டி (IND vs AUS 2nd T20I) கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் (Team India) மாற்றம் செய்யப்படாத நிலையில், ஆஸ்திரேலிய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

யஷஸ்வி சரவெடி…

அதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி மிக அற்புதமான தொடக்கத்தை கொடுத்தது. குறிப்பாக, ஜெய்ஸ்வால் சேன் அபாட் வீசிய நான்காவது ஓவரில் 4,4,4,6,6,0 என வரிசையாக பவுண்டரிகளை அடித்து அந்த ஓவரில் 24 ரன்களை குவித்தார். தொடர்ந்து நாதன் எல்லிஸ் வீசிய 6ஆவது ஓவரிலும் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை அடித்து அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) அதே ஓவரின் 5ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், பவர்பிளே முடிவில் (6 ஓவர்கள்) இந்திய அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 77 ரன்களை எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை அடித்திருந்தார். குறிப்பாக, இதுதான் சர்வதேச டி20 போட்டிகளின் பவர்பிளே ஓவர்களில் இந்திய குவித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

ஜெய்ஸ்வால் பவர்பிளேவில் காட்டிய அதே அதிரடியை இஷான் கிஷன் அதன்பின் காட்டத் தொடங்கினார். அப்போதும், ருதுராஜ் நிதானமாகவே விளையாடினார். இஷான் கிஷனும் 28 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். தொடர்ந்து 15ஆவது ஓவரில் அவர் நாதன் எல்லிஸிடமே வீழ்ந்தார். அவர் 32 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை அடித்திருந்தார். 

பினிஷர் ரின்கு

சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) வந்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து எதிர்பார்ப்பை எகிறவைத்தார். ஆனால், அவர் 19(10) ரன்களிலேயே நடையைக் கட்டினார். முன்னதாக, ருதுராஜ் 50 ரன்களை பதிவு செய்தார். இதன்மூலம், டி20 போட்டியில் முதல்முறையாக நேற்று இந்திய அணியின் டாப் 3 பேட்டர்கள் அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

அடுத்து வந்த ரின்கு சிங் சீன் அபாட் பந்துவீச்சில் மூன்று பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா தன் பங்குக்கு ஒரு சிக்ஸ் அடித்து ஸ்ட்ரைக்கை ரின்குவிடம் கொடுக்க அவர் கடைசி 2 பந்துகளில் முறையே பவுண்டரி, சிக்ஸரை அடித்து இன்னிங்ஸை முடித்துவைத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களை பதிவு செய்தது.

இந்தியா கடந்த மைல்கல்கள்

இதுதான் சர்வதேச டி20 அரங்கில் ஆஸ்திரேலியாவுக்கு (Australia National Cricket Team) எதிராக இந்திய அணி குவித்த அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் கடந்தாண்டு மொஹாலியில் நடைபெற்ற போட்டியின் சேஸிங்கில் 211 ரன்களை குவித்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதுமட்டுமின்றி சர்வதேச டி20 வரலாற்றில் அதிக முறை 220+ ரன்களை அடித்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்தியா தற்போது 9 முறை 220+ ரன்களை குவித்துள்ளது, தென்னாப்பிரிக்கா 8 முறை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரின்கு சிங் (Rinku Singh) 9 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 31 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் எல்லிஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டாய்னில் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 236 ரன்கள் என இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. இமலாய இலக்கு என்பதால் அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா இருந்தது. அதேபோல் ரன்களையும் குவித்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டையும் இழந்தது. குறிப்பாக, பவர்பிளே ஓவரில் 53 ரன்களை குவித்தாலும் ஷார்ட், இங்லிஸ், மேக்ஸ்வெல் என அதிரடி ஆட்டக்காரர்களை அடுத்தடுத்து இந்திய பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர்.

போராடிய ஆஸ்திரேலியா 

ஒருபக்கம் நிதானம் காட்டிய ஸ்மித்தை பிரசித் கிருஷ்ணா அவுட்டாகினார். அவர் 16 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்திருந்தார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ், டிம் டேவிட் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்தனர். இருப்பினும், டிம் டேவிட்டை 37(22) ரன்களில் ரவி பீஷ்னோயும், ஸ்டாய்னிஸை 45(25) ரன்களில் முகேஷ் குமாரும் வீழ்த்தினர். தொடர்ந்து, அடுத்தடுத்த ஓவர்களில் டெயிலெண்டுகள் வீழ்ந்தாலும், மேத்யூ வேட் கடைசி கட்ட ஓவர்களில் அதிரடி காட்டினார் எனலாம். 

16.5 ஓவரில் ஸாம்பா ஆட்டமிழக்கும்போது, 155 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆஸ்திரேலியா. ஆனால், அந்த அணியின் கேப்டன் மேத்யூ வேட் ஆஸ்திரேலியாவின் போராட்ட குணத்தை வெளிப்படுத்தினார். மீதம் இருந்த 19 பந்துகளில் வெறும் 4 பந்துகளை மட்டுமே டன்வீர் சங்கா பேட்டிங் செய்தார். மீதம் இருந்த பந்துகளை மேத்யூ வேட் எடுத்துக்கொண்டு விளாசித் தள்ளினார். இலக்கை எட்டாவிட்டாலும் நல்ல ஸ்கோரை ஆஸ்திரேலியா அடித்திருந்தது. 

பாகிஸ்தானை முந்திய இந்தியா…!

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை ஆஸ்திரலியா அடித்தது. மேத்யூ வேட் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 23 பந்துகளில் 42 ரன்களுடனும், சங்கா 4 பந்துகளில் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, ரவி பீஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். பவர்பிளேவில் அதிரடியை காண்பித்து இந்தியாவின் இமாலய ஸ்கோருக்கு வித்திட்ட ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகனாக தேர்வானார். 

மேலும், இது சர்வதேச டி20 அரங்கில் இந்திய அணியின் 135ஆவது வெற்றியாகும். இந்த வெற்றியை பெற்றதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியும் 135 வெற்றிகளை பெற்றிருந்தாலும் இந்தியா இந்த சாதனையை 211 போட்டிகளில் செய்துள்ளது. பாகிஸ்தான் (Pakistan National Cricket Team) இதுவரை 226 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரோகித், விராட் கோலி இளம் வீரர்களோடு போட்டியிட்டால் விளையாடலாம் – ஆஷிஷ் நெஹ்ரா
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.