தமிழகத்தில் 100 சட்டமன்றத் தொகுதிகளில் டிச.2-ல் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட முகாம்: அமைச்சர் தகவல்

சென்னை: கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு 100 இடங்களில் காப்பீட்டுத் திட்டத்துக்கான முகாம்கள் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, வருகிற டிசம்பர் மாதம் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் 100 சட்டமன்றத் தொகுதிகளில் 100 முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் – 48 திட்டத்தின் 2 லட்சமாவது பயனாளியை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “மறைந்த முதல்வர் கருணாநிதியால் 2009-ம் ஆண்டு ஜூலை 23-ம் நாள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை 1 கோடியே 45 லட்சம் குடும்பங்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான அட்டையினை பெற்று இருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரூ.5 லட்சம் வரை பிரீமியத் தொகை கிடைக்க இருக்கிறது. தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் யுனெடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1546 கோடி ஆண்டொன்றுக்கு செலுத்தி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் ரூ.7,730 கோடி செலவு என்கிற வகையில் தமிழக முதல்வரால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1,829 மருத்துவமனைகளில் இக்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 854 அரசு மருத்துவமனைகளிலும் 975 தனியார் மருத்துவமனைகள் என்று இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், தமிழகத்தில் புதியதாக திருமணம் ஆனவர்கள் புதிய குடும்பங்கள் உருவாகிக் கொண்டிருப்பதாலும் விடுபட்ட குடும்பத்தினருக்கும் இக்காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதற்கு ஏதுவாக கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு 100 இடங்களில் காப்பீட்டுத் திட்டத்துக்கான முகாம்கள் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் வருகிற டிசம்பர் மாதம் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் 100 சட்டமன்றத் தொகுதிகளில் 100 முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. இந்த காப்பீட்டு முகாம்களை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.