தொழிலாளர்கள் மீட்கப்பட்டதை அறிந்து நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்: ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடெல்லி,

17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சுரங்க விபத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். சுரங்கத்தில் இருந்து ஒருவரை மீட்க 2 முதல் 3 நிமிடங்கள் வரை ஆவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களை உத்தரகண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி, மத்திய மந்திரிவி.கே.சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டதை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கைத்தட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பல்வேறு சவால்களை கடந்து தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்டுள்ள மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்தநிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டதை அறிந்து நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். 17 நாட்களாக சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சந்தித்த தடைகள், மனித சகிப்புத் தன்மைக்கு சான்று. அவர்களின் மன உறுதிக்கு தேசம் தலை வணங்குகிறது.

வரலாற்றில் மிகவும் கடினமான மீட்புப் பணிகளில் ஒன்றான இதனை நம்பமுடியாத மன உறுதியுடன் செயல்பட்டு தொழிலாளர்களை மீட்டுள்ள மீட்புக்குழுவினர், நிபுணர்களை வாழ்த்துகிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.