இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபது ஓவர் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணி ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடியால் 222 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்தார். அஸ்திரேலிய அணிக்கு எதிராக 20ஓவர் கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ரன்கள் விளாசினார். அவருக்கு பக்கபலமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களும்,. திலக் வர்மா 31 ரன்களும் எடுத்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரில் நீடிக்க முடியும் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி சேஸிங்கை தொடங்கியது முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த டிராவிஸ் ஹெட் இப்போட்டியிலும் சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தன் பங்குக்கு 18 பந்துகளில் 35 ரன்கள் விளாச, அடுத்து வந்த மேக்ஸ்வெல் நங்கூரம் போல் நிலைத்து நின்றதுடன் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் வெளுத்து வாங்கினார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை தனியொரு வீரராக நின்று வெற்றியை தேடி தந்ததுபோல் இப்போட்டியிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் அவர். மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும். கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது.
பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரை இருவரும் வெளுத்து வாங்கினர். 4 ஓவர்களை வீசிய பிரசித் கிருஷ்ணா 68 ரன்களை வாரி வழங்கினார். இந்த ஓவரில் மட்டும் 6, 4,4,4 என விளாசினார் மேக்ஸ்வெல். அத்துடன் ஆட்டநாயகனாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.