சென்னை: தமிழகத்தில் கனமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கையை ஒட்டி, சென்னை காவல் துறை சில அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 3-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் புயல், நான்காம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து ஐந்தாம் தேதி ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலானது கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, டிசம்பர் 4-ம் தேதியன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, புயல் மற்றும் அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 4-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு மழை விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை மாலையில் இருந்தே விட்டுவிட்டு கனமழை நீடித்து வரும் நிலையில், மக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை காவல் துறை பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம்:
- புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- கனமழை அல்லது இடியுடன் கூடிய மழையின்போது வெளியயே செல்வதை தவிர்க்கவும். நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தால், பொது போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனத்தைப் பயன்படுத்தவும். இடி, புயலின்போது எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
- மின்கம்பங்கள். கம்பிகள், உலோகப் பொருள்கள் அல்லது மின்னலை ஈர்க்கக் கூடிய கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்கவும், விழுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம் எனவும், அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
பொதுமக்கள் சாலையில் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
- வாகனங்களை மெதுவாகவும் கவனமாகவும் ஓட்டவும்.
- வாகனங்களை ஓட்டும் போது, பிரேக்குகளை சரிபார்க்கவும்.
- தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் வாகனம் ஓட்ட வேண்டாம்.
- வாகனங்களின் வைப்பர்களைச் சரிபார்க்கவும்.
- வாகனங்களில் செல்லும் போது குறிப்பிட்ட
- பின்பற்றவும், பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும்.
- வெளியில் செல்வதை தவிர்க்கவும்.
- மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
- பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
- வானிலை அறிவிப்புகள் மற்றும் அதிகாரிகளின் உடனுக்குடன் எச்சரிக்கைகளைப் பின்பற்றவும்.
- சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு அச்சப்படாதீர்கள்.
- அவசர நிலைகளுக்கு தொலைபேசி எண்.100-ஐ அழைக்கவும்.
சென்னை பெருநகர காவல் துறையினர் போர்க்கால அடிப்படையில் சேவை செய்ய 24 மணி நேரமும் தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.