இந்தியா முழுவதும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் அம்மாநில அரசுகளுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக மோதல் அதிகரித்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் நீண்ட காலம் கிடப்பில் போடுவதாக எதிர்க்கட்சிகள் ஆளும் எல்லா மாநிலங்களுமே குற்றம்சாட்டி வருகின்றன.
இதற்காக தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் கவர்னருக்கு எதிராக வழக்கும் போட்டுள்ளன. நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு இந்த மாநிலங்கள் கோரி வருகின்றன. இந்த வழக்குகளை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், ஆளுநர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது அதேநேரம் ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியும் தெரிவித்து வருகிறது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுப்பதாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, ஆளுநர் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணியும் தமிழ்நாடு அரசு சார்பில், வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியும் ஆஜராகினர்.
நவம்பர் 13-ம் தேதி ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியதாகவும், 18-ம் தேதி அது மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்ப வைக்கப்பட்டதாகவும் கூறிய தமிழ்நாடு அரசு, விசாரணைக்கு ஒரு நாள் முன்னதாக 10 மசோதாக்கள் ஜனாதிபதியிடம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார். இது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என்றும் அவர் வாதிட்டார்.

அப்போது, குறுக்கிட்ட அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி, `அரசியல் சாசனம் 200 வழங்கியுள்ள அதிகாரத்தின்படி மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்கலாம், குடியரசு தலைவருக்கு அனுப்பலாம் அல்லது திரும்ப அனுப்பலாம்’ என்றார். இதற்கான அதிகாரங்கள் ஆளுநருக்கு உள்ளதாகவும் வாதிட்டார். அந்த அடிப்படையியிலேயே, மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அட்டர்னி ஜெனரல் வாதங்களை முன்வைத்தார்.
இந்த வழக்கில் மசோதாக்கள் Withhold எனக் கூறப்பட்ட பிறகு, அது தொடர்பான கோப்புகள் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப் பட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, ஆளுநர் தரப்பில் மசோதாக்கள் Withhold என கூறப்பட்டபோது, சட்டப்பேரவைக்கு அனுப்பப்பட்ட ஆளுநரின் communication கடிதம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதை நீதிபதிகள் வாசித்தனர்.
இதையடுத்து, ஆளுநருக்கு அடுக்கடுக்காய் கேள்விகளை தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியது. “முதன்முறை மசோதா ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டபோதே குடியரசு தலைவருக்கு அனுப்பி இருக்கலாம். மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்து விட்டு பின்னர் சட்டமன்றத்துக்கு அனுப்பி, அது மீண்டும் நிறைவேற்றப்பட்ட பிறகு குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய தேவை என்ன?
Withheld assent என்று முன்பு முடிவெடுத்த ஆளுநர் தற்போது ஏன் குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை அனுப்ப வேண்டும். இந்த முடிவு மூலம் ஆளுநர் தரப்புக்கு குழப்பம் உள்ளது உறுதியாகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, அனுமதி வழங்காமல் நிறுத்தி வைப்பது அல்லது மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது என அரசியல் சாசன பிரிவு 200 கீழ் உள்ள மூன்றில் ஒன்றைதான் ஆளுநர் மேற்கொண்டிருக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவருக்கான அதிகாரங்கள் விரிவானது. ஆனால், ஆளுநர் மத்திய அரசின் nominee மட்டுமே. அதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும். சட்டத்தை செயலிழக்கச் (kill the bill) செய்யவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.
அப்போது பேசிய அட்டர்னி ஜெனரல், “அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஆளுநருக்கு, மசோதாவை நிறுத்தி வைத்திருக்க நான்காவதாக அதிகாரம் உள்ளது” என்று வாதிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “மசோதாக்கள் விவகாரத்தில் முதலமைச்சரை நேரில் அழைத்து பேசி பிரச்னைக்கு ஆளுநர் சுமூக தீர்வு காண வேண்டும். அவ்வாறு பேசினால்தால் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண இயலும் ” என்று அறிவுறுத்தினர்.
இது ஒரு புறமிருக்க, கேரளாவின் கண்ணுார் பல்கலைக்கழக துணை வேந்தராக பதவி வகித்து ஓய்வு பெற்ற கோபிநாத் ரவீந்திரன், மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்ட விவகாரத்தில், மாநில அரசு தேவையில்லாமல் குறுக்கிட்டுள்ளதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், அந்த நியமனத்துக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.
கேரளாவில் கண்ணுார் பல்கலையின் துணை வேந்தராக இருந்த கோபிநாத் ரவீந்திரன் ஓய்வு பெற்றார். ஆனால், அவரை மீண்டும் துணை வேந்தராக நியமித்து, 2021ம் ஆண்டு நவம்பர் 23ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் 60 வயதுக்கு உட்பட்டவர் மட்டுமே இப்பதவி வகிக்க முடியும் என்பதால் இந்த நியமனத்தை ரத்துசெய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மறு நியமனம் உறுதி செய்யப்பட்டது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
இந்நிலையில் கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபிநாத் ரவீந்திரனை மீண்டும் நியமிக்கும் கேரள அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. மேலும் மறுநியமனத்தை உறுதிசெய்த கேரள உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பையும் நீதிபதிகள் ரத்து செய்தனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “ஒரு மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு பதவி வழியாக ஆளுநரே வேந்தராக இருக்கிறார். பல்கலைக்கழகத்தின் அனைத்து விஷயங்களிலும் மாநில அமைச்சரவையை சார்ந்திருக்காமல் வேந்தர் என்ற முறையில் ஆளுநரே சுதந்திரமாக முடிவுகளை எடுக்கிறார். ரவீந்திரன் நியமனத்தை ஆளுநர் வெளியிட்டிருந்தாலும் அவரது முடிவில் மாநில அரசின் தேவையற்ற தலையீடு உள்ளது” என்று கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மாநில உயர்கல்வி அமைச்சர் பிந்துவை நான் குறை கூற மாட்டேன். முதல்வர் பினராயி விஜயன், அவர் வாயிலாக எனக்கு கடும் நெருக்கடி கொடுத்தார் என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.