உலக கோப்பை தோல்விக்கு அந்த 2 பேர் காரணம்… பிசிசிஐக்கு ரிப்போர்ட் கொடுத்த டிராவிட்

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. லீக் போட்டிகளில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்திய அணி இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்தது. ஆனால் குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடந்ததே வேறு. லீக் போட்டியில் இந்திய அணியிடம் மரண அடி வாங்கிய ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் அதற்கு பழி தீர்த்தது. டாஸ் வெற்றி பெற்று பவுலிங் எடுத்து, இந்திய அணி 240 ரன்களுக்கு சுருட்டியதுடன் சேஸிங்கில் அதிரடியாக அடி வெற்றி வாகையும் சூடியது.

இது இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பிசிசிஐக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்தது. இதனையடுத்து உடனே இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்த ரிப்போர்ட்டை பிசிசிஐ கேட்டது. அதற்கு பதில் அளித்த டிராவிட், ஸ்பின்னர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விக்கெட் விழாத காரணத்தால் ஒருநாள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக விளக்கம் கொடுத்துள்ளார்.

9 லீக் போட்டிகள் மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் ஸ்பின்னர்களின் சிறப்பான பந்துவீச்சு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாகவும், ஆனால் இறுதிப் போட்டியில் ஸ்பின்னர்களுக்கு மைதானம் ஒத்துழைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒருவேளை சுழற்பந்துவீச்சுக்கு மைதானம் ஒத்துழைத்திருக்கும்பட்சத்தில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்றும் ராகுல் டிராவிட் பிசிசிஐக்கு கொடுத்துள்ள விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலக கோப்பை இறுதிப்போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களாக குல்தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்தனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. இதுவே அணியின் தோல்விக்கு காரணம் என கூறியிருப்பதால் உலக கோப்பை கிடைக்காமல் போனதற்கான முழு பழியும் இப்போது ஜடேஜா மற்றும் குல்தீப் மீது இறங்கியுள்ளது. 

உலக கோப்பையுடன் ராகுல் டிராவிட்டின் இந்திய அணிக்கான பயிற்சியாளர் ஒப்பந்தம் பதவி முடிவுக்கு வந்தது.ஆனால் அவரின் பணியில் திருப்தியாக இருப்பதால் அடுத்து வரும் 20 ஓவர் உலக கோப்பை வரை பயிற்சியாளர் பதவியை தொடருமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் அதற்கான ஒப்பந்தத்தில் டிராவிட் இன்னும் கையெழுத்திடவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.