ஒற்றைத் தலைமை விவகாரத்தால் தனித்து செயல்படும் பன்னீர் தரப்புக்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டது எடப்பாடி தரப்பு. தனது தரப்பை வலுப்படுத்த ‘புரட்சி பயணம்’ தொடங்கவிருந்த பன்னீர் தரப்புக்கு மழை உள்ளிட்ட காரணிகள் முட்டுக்கட்டை போட்டுவிட்டது.

அ.தி.மு.க என்ற கட்சியின் சார்பாக மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சியின் பெயரைக்கூட தற்போது பயன்படுத்த முடியாதநிலை இருக்கிறது. இந்நிலையில்தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ம் தேதி பேரணி நடத்த பன்னீர் தரப்பு ஆயத்தமாகி வருகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் பசுமை வழிச்சாலையில் உள்ள பன்னீரின் வீட்டில் நவம்பர் 30-ம் தேதி நடைபெற்றியிருக்கிறது.
இதில் ஆலோசிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பன்னீருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். “அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாதென்று நீதிமன்றம் மூலமாக தடை வாங்கிவிட்டார் எடப்பாடி. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும்வரை கட்சி பெயர், கொடியை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இந்நிலையில்தான், அம்மா நினைவு நாளில் பேரணியை ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த பேரணியானது சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் இருந்து தொடங்கப்படுகிறது. இந்த பேரணிக்காக சென்னை, புறநகர் பகுதியில் உள்ள 10 மா.செ.க்கள் 8000 பேரை அழைத்து வர ஓ.பி.எஸ் உத்தரவிட்டு இருக்கிறார். இதுபோக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆட்கள் வரவிருக்கிறார்கள். எப்போதும் இல்லாத வகையில், பேரணிக்கான செலவை ஓ.பி.எஸ் ஏற்றுக் கொண்டு இருக்கிறாராம்.
அதன்படி, அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா மற்றும் ஓ.பி.எஸ் படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை தயாராகி வருகிறது. இதுகுறித்துதான் ஆலோசனை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அந்த தருணத்தில்தான், 5 மாநில தேர்தலுக்கான வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. இதில் ஒருசில மாநிலங்களை மட்டும்தான் பா.ஜ.க கைபற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதுகுறித்தும் பன்னீர் பேசினார். அதாவது, ‘பா.ஜ.க தோத்துட்டா, நமக்கு லாபம்தான். ஏன்னா ஐந்து மாநிலங்களில் பெரும்பான்மையாக பாஜக வந்துவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு பக்கம் முழு கவனத்தை செலுத்த மாட்டார்கள்.

அதேநேரத்தில், ஒருசில மாநிலங்களை மட்டுமே பாஜக கைப்பற்றினால், தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.க்கள் நிச்சயம் வேண்டுமென்று பா.ஜ.க எண்ணும். அப்போது முழு கவனமும் தமிழ்நாடு பக்கமும் இருக்கும். அப்படி இருந்தால், வலுவான கூட்டணி வேண்டுமென்று பா.ஜ.க கணக்கு போடும். அதற்கு நாம் நிச்சயம் அவர்களுக்கு தேவை. அதன்படி, நம் அணி, அ.ம.மு.க உள்ளிட்ட பல கட்சிகளை ஒன்றிணைந்து மெகா கூட்டணியை அமைக்க பா.ஜ.க முயலும். அல்லது அ.தி.மு.க-வை ஒன்றிணைக்கும் பணியை அவர்களே மேற்கொள்வார்கள். அதுதான் நமக்கு வேண்டும். என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்’ என்று ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்தார். ஓ.பி.எஸ் கருத்தில் உண்மை இருப்பதை உணர்ந்த நிர்வாகிகளும் அதை ஆமோதித்தனர். இப்படியாக ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது” என்றனர் விரிவாக. ஐந்து மாநிலத் தேர்தல்களில் பதிவான வாக்குகளில் 4 மாநிலங்களின் முடிவு வரும் டிசம்பர் 3-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் பாஜகவின் வெற்றித் தோல்வியை முடிவு வைத்து பன்னீர் ஒரு கணக்கு போட்டு இருக்கிறார். இதில் எதில் சரியான விடை வரும்பென்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.