பெங்களூரு: கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக 2-வது ஆண்டாக பெங்களூருவில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. சிவாஜிநகர் அருகிலுள்ள இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினீயர்ஸ் வளாகத்தில் கர்நாடக சுற்றுலாத்துறை இயக்குநர் டாக்டர் ராம்பிரசாத் மனோகர், தினச்சுடர் ஆசிரியர் பா.தே. அமுதன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
வரும் 10-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் புத்தக வெளியீடு, கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட இலக்கிய நிகழ்வுகளுக்கும், தமிழ் மரபு விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறுதி நாளில் அறிஞர் குணாவுக்கு கர்நாடகத் தமிழ்ப் பெருந்தகை விருதும், 25 பேருக்கு கர்நாடக தமிழ் ஆளுமை விருதும் வழங்கப்படுகிறது.
இன்று மாலை 6 மணிக்கு வி.டில்லிபாபு எழுதிய ‘கையருகே கிரீடம்’ நூல் வெளியிடப்படுகிறது. எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன், வனத்துறை அதிகாரி மாலதிபிரியா ஆகியோர் இந்த நூலை வெளியிட்டு உரையாற்றுகின்றனர். கையருகே கிரீடம் நூலானது இந்து தமிழ் திசையின் வெற்றிக்கொடி இணைப்பிதழில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.