`கையில் காப்பர் டி-யோட குழந்தை பிறக்கும்!' I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -124

பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் கருத்தடை சாதனங்களே, சில அசாதாரண சூழல்களில் சிலருக்கு தொந்தரவாக அமைந்துவிடலாம். அப்படிப்பட்ட சில கேஸ் ஹிஸ்டரிகளை இன்றைய கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

”அந்த தம்பதி ரொம்பவே தயங்கி தயங்கி என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களுடைய பிரச்னை பற்றி தெரிந்தபோது, அவர்கள் தயக்கம் நியாயம்தான் என்று தோன்றியது. அந்த ஆணுக்கு விறைப்புத்தன்மையில் பிரச்னை இருந்திருக்கிறது. அத்துடன் காண்டம் அணிந்துகொண்டு தாம்பத்ய உறவில் ஈடுபட்டிருக்கிறார். விளைவு, காண்டம் கழன்று அவருடைய மனைவியின் பெண்ணுறுப்பிலேயே தங்கி விட்டிருக்கிறது. அவர்களால் எடுக்க முடியாத காரணத்தால், மருத்துவரை நாடி வந்திருக்கிறார்கள்.

Sexologist Kamaraj

சில நேரங்களில், காண்டம் கிழிந்து உள்ளேயேதங்கி விடலாம். இது சம்பந்தப்பட்ட பெண்ணுக்குக்கூட தெரியாமலே இருந்து விடலாம். அடிவயிற்றில் வலி என்று மருத்துவரிடம் வரும்போதுதான், இது தெரிய வரும். சிலருக்கு, காண்டம் கிழிந்து பெண்ணுறுப்பில் சிறு துண்டு இருக்கிறது என்பது தெரியும். ஆனால், அவர்களால் எடுக்க முடியாத அளவுக்கு உள்ளே சென்றுவிட்டிருக்கும். கேட்பதற்கும், படிப்பதற்கும் பயத்தை ஏற்படுத்துகிற இந்தப் பிரச்னைகள், மிகவும் இயல்பானவைதான். மருத்துவரிடம் சென்றால், ஃபோர்செப்ஸ் மூலம் பெண்ணுறுப்புக்குள் இருக்கிற காண்டமையோ, கிழிந்த காண்டம் துண்டையோ வெளியே எடுத்து விடுவார்.

இந்தியாவில் பல பெண்கள் கருத்தடைக்காக காப்பர் டி-யையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதுகூட எங்கோ ஒரு சிலருக்கு பிரச்னைகளை ஏற்படுத்தலாம். காப்பர் டி நகர்ந்து கருப்பைக்குள்ளே போய்விடலாம். என்றாலும், இதை எளிமையாக எடுத்து விடலாம். சில நேரம் கருப்பையை துளைத்து இன்னும் உள்நகர்ந்து சென்றுவிடலாம். அப்போது லேப்ரோஸ்கோபி மூலம்தான் வெளியே எடுக்க வேண்டும். ஆனால், இது அரிதாக மட்டுமே நிகழக்கூடியது. காப்பர் டி பொருத்தியிருந்தாலும், சில பெண்கள் இதையும் மீறி கர்ப்பமாகி விடுவார்கள். குழந்தை பிறக்கும்போதே கையில் காப்பர் டி-யைப் பிடித்தபடி பிறக்கும்.

Sex Education

கருத்தடை மாத்திரை சாப்பிட்ட அன்று வாந்தி எடுத்தால், அதனுடன் கருத்தடை மாத்திரையும் வெளியேறிவிடலாம். பேதியானாலோ, உடம்பால் கருத்தடை மாத்திரையின் மருத்துவ பலனை கிரகிக்க முடியாமல் போய்விடலாம். இதுபோன்ற நாள்களில் காண்டமையும் சேர்த்துப் பயன்படுத்துவது நல்லது.

மேலே சொன்ன அத்தனை தகவல்களையும் கவனத்தில் வைத்துக்கொண்டால், கருத்தடை சாதனங்கள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும்” என்கிறார் டாக்டர் காமராஜ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.