செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை 'டீப்பேக்' வீடியோ தயாரிக்க பயன்படுத்துவது சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் – ஜனாதிபதி

மும்பை,

ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ராஷ்டிரசந்த் துக்கடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் 111-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய அவர் பேசியதாவது:- தற்போது இளைஞர்கள் எல்லோரும் தொழில்நுட்பத்தை புரிந்து பயன்படுத்துகின்றனர். எல்லா வளங்களும் நல்ல விஷயத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த உண்மை தொழில்நுட்பத்துக்கும் பொருந்தும். அது சரியாக பயன்படுத்தப்பட்டால் சமூகத்துக்கு பயன் அளிக்கும். ஆனால் தவறாக பயன்படுத்தப்பட்டால் மனிதநேயத்தை பாதிக்கும்.

இன்று ‘ஏ.ஐ.’ என்ற செயற்கை நுண்ணறிவு நமது வாழ்க்கையை எளிமையாக்கி உள்ளது. ஆனால் தொழில்நுட்பத்தை ‘டீப்பேக்’ போலி வீடியோ தயாரிக்க பயன்படுத்துவது சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகி உள்ளது. இந்த பிரச்சினைக்கு நல்லொழுக்க கல்வி தீர்வாக அமையும்.

இன்று பட்டம் பெற்றவர்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் பெண்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாக்பூர் பல்கலைக்கழகம் மூலமாக சுமார் 4 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் 40 சதவீதம் பேர் மாணவிகள். அது திருப்தி அளிக்க கூடிய ஒன்றாகும். பெண் கல்வியில் முதலீடு செய்வது தான் நாட்டின் வளர்ச்சிக்கான மிகச்சிறந்த முதலீடாக நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ‘டீப்பேக்’ வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ‘டீப்பேக்’ வீடியோ என்பது ஒருவரின் உடலில் மற்றொரு நபரின் முகத்தை ஒட்டி போலியாக சித்தரிக்கப்படும் வீடியோ ஆகும். கடந்த மாதம் ‘டீப்பேக்’ விவகாரம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்து இருந்தார். அப்போது தொழில்நுட்பத்தை பொறுப்புடன் கையாளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.