அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று 2019-ம் ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி கோயில் கட்டுமான பணிக்காக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
ராமர் கோயில் வளாகம் 2.7 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் 57,400 சதுர அடியில் கோயில்கட்டப்பட்டு உள்ளது. 360 அடி நீளம்,235 அடி அகலம், 161 அடி உயரத்தில் 3 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட கோயில் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. 12 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
வரும் ஜனவரி 1-ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்து உள்ளது.
அன்றைய தினம் தற்போது தற்காலிக இடத்தில் உள்ள குழந்தை ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி புதிய கோயிலுக்கு சுமந்து செல்ல உள்ளார். குடமுழுக்கில் பங்கேற்க மடாபதிகள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என 6,000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
குடமுழுக்கு நாளில் அயோத்தி நகரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டபக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே அயோத்தியில் நட்சத்திர ஓட்டல்கள் முதல் சாதாரண விடுதிகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
சில நட்சத்திர ஓட்டல்களில் மட்டும் முன்பதிவு நடைபெறுகிறது. அந்த நட்சத்திர ஓட்டல்களில் இருநபர்கள், இரு இரவுகள் தங்கரூ.55,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அயோத்தியின் சாதாரண ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் இரு படுக்கை வசதி அறைக்கு ரூ.20,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஓட்டல், விடுதி அறை கிடைக்காத பக்தர்களின் வசதிக்காக அயோத்தியில் 3.7 ஏக்கர் பரப்பில் சரயு நதிக்கரையில் ஏராளமான கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அங்கு சுமார் 80,000 பேரை தங்க வைக்க முடியும். இதற்கான முன்பதிவு ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு நகரங்களில் இருந்துஉபி. செல்ல இப்போதே விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் சென்னையில் இருந்து லக்னோ சென்று திரும்ப எக்னாமிக் வகுப்புக்கு ரூ.30,000-ம், பிசினஸ் வகுப்புக்கு ரூ.1.5 லட்சமும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அயோத்தியில் கட்டப்படும் சர்வதேச விமான நிலையம் ராமர் கோயில் குடமுழுக்குக்கு முன்பாக திறக்கப்பட உள்ளது. எனவே நாடு முழுவதும் இருந்து நேரடியாக அயோத்திக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
குடமுழுக்கை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.