2024 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மையில் (30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மொத்த மதிப்பீட்டுச் செலவு மற்றும் வருமானம் ஈட்டும் அடிப்படையாகப் பயன்படுத்தும் நிதி மற்றும் பொருளாதார அனுமானங்கள் தொடர்பான அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு அரசாங்கத்தின் கொள்கைகளுடன் இணங்குகிறதா என்பது உள்ளிட்ட மதிப்பீடுகள் தொடர்பான அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவது இதன் நோக்கமாகும். இந்தக் கலந்துரையாடல் கலாநிதி ரோஷன் ஆன் பெரேரா, கலாநிதி வெணுர வெலகெதர, கலாநிதி துஷ்ணி வீரகோன் மற்றும் கலாநிதி நீஷா அருணதிலக ஆகியோரினால் நெறிப்படுத்தப்பட்டது.
எதிர்பார்க்கப்படும் வரிகளை வசூலிப்பதற்கான சாத்தியக்கூறுகளுக்கு மேலதிகமாக பொதுச் சேவைகளைப் பயன்படுத்தும் போது வரி அடையாள எண்ணைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், அதிகரித்து வரும் வட்டி செலுத்துதல், காரணிச் சந்தை மறுசீரமைப்பு, அரச வங்கிகளில் சாதகமான இருப்பு போன்றகேள்விகள் இந்தக் கலந்துரையாடலில் எழுப்பப்பட்டன. கடந்த ஆண்டில் 31,000 பேர் மாத்திரமே குறைந்த அளவில் ஒருசில அளவு தனிநபர் வருமான வரி செலுத்தியுள்ளதாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தினர். அத்துடன், 05,000 வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய கம்பனிகளில் 30,000 கம்பனிகள் மாத்திரமே வருமான அறிக்கைகளை சமர்பித்துள்ளதாகவும் இதன்போது புலப்பட்டது.
கேள்வி பதில் மற்றும் குழுக் கலந்துரையாடலாக இடம்பெற்ற இந்த செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் வளவாளர்களுடம் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் காணப்பட்டது.
இந்தக் செயலமர்வில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.