ஏலத்தை ஆளப்போகும் இந்த 5 வீரர்கள்… இவர்களுக்கு கோடிகள் கொட்டப்போகுது!

IPL Auction 2024: 17ஆவது ஐபிஎல் சீசனை முன்னிட்டு வீரர்களுக்கான ஏலம் வரும் டிச. 19ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. முதல்முறையாக ஐபிஎல் ஏலம் வெளிநாட்டில் நடக்க உள்ளது. இதில் மொத்தம் 1166 வீரர்கள் ஏலத்திற்காக விண்ணப்பித்துள்ளனர்.

10 அணிகளிடமும் மொத்தம் ரூ.262.95 கோடியை வைத்துள்ள நிலையில், 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 77 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த 77 வீரர்களை தேர்வு செய்யவே ஏலம் நடைபெறுகிறது எனலாம். இந்த ஏலத்தை டிச.19ஆம் தேதி ஜியோ சினிமா செயலியிலும், தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் காணலாம். 

அந்த வகையில், இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு விற்பனையாவார்கள் என எதிர்பார்க்கப்படும் 5 வீரர்களை இங்கு காணலாம். அதுவும், இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்கள்தான் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் எனலாம்.

ஹாரி ப்ரூக் 

ஹாரி ப்ரூக் ஏலத்தின் அடிப்படைத் தொகை ரூ.1.5 கோடி ஆகும். இவரை கடந்த ஏலத்தில் ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எடுத்தது. ஆனால், இவரின் முதல் சீசன் சரியாக அமையாததால் அவர் எஸ்ஆர்ஹெச் அணியில் இருந்து தற்போது விடுவிக்கப்பட்டார். இருப்பினும், இவரின் ப்ரீ-ஹிட்டிங் பாணி பலரையும் ஈர்க்கிறது. எனவே, இந்த ஏலத்திலும் அவர் அதிக தொகைக்கு போவார். 

டேரில் மிட்செல்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 2022ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். வெறும் 2 போட்டிகளில் மட்டுமே அவர் ஐபிஎல் தொடரில் விளையாடினார். அவரின் அடிப்படை தொகை 1 கோடி ரூபாய் ஆகும். சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை உள்ளிட்ட அணிகள் இவரை எடுக்க முயற்சிக்கும்.

ஜெரால்ட் கோட்ஸி

உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் கோட்ஸி. இவர் தற்போது ஏலத்தில் பதிவு செய்துள்ளார். இவரை சிஎஸ்கே, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட அணிகள் வாங்க முற்படும். இவர் ஜோகனஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவதால் சிஎஸ்கே இவரை கைவிடாது எனவும் நம்பலாம். 

ரச்சின் ரவீந்திரா

இவரும் இந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு மட்டுமல்ல கிரிக்கெட்டுக்கே கிடைத்த ஒரு பொக்கிஷம். இடதுகை சுழற்பந்துவீச்சாளராக அறியப்பட்ட ரவீந்திரா, தற்போது அவரின் அதிரடி மற்றும் நுணுக்கமான ஆட்டத்தால் பெயர் பெற்றுள்ளார். இவரின் அடிப்படை தொகை ரூ.50 லட்சம்தான். ஆனால், இவரை பல கோடிகள் கொடுத்து எடுக்க அணிகள் தயாராக இருக்கும். குஜராத், பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட அணிகள் இவரை எடுக்க முயற்சிக்கும். 

டிராவிஸ் ஹெட்

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை கதறவிட்டவர், ஹெட். அப்போதே இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. இவர் 2 கோடி ரூபாயை அடிப்படை தொகையாக நிர்ணயித்துள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் இவரை கொத்திக்கொண்டு போக காத்திருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.