மதுரை மண்டல சி.ஐ.ஐ-யின் ‘யங் இந்தியன்’ அமைப்பு சார்பில் ‘Yi EVOLVE 3.0 – ‘Raise Madurai’ என்ற தலைப்பில் இளம் தொழில்முனைவோருக்கான தலைமைத்துவ கருத்தரங்கு மதுரையில் நடந்தது.
பல்வேறு தொழில் துறைகளில் வெற்றி பெற்றவர்களையும், தொழில் வியூகம் அமைப்பவர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்களையும் அழைத்து வந்து தென் மாவட்டங்களை சேர்ந்த இளம் தொழிலதிபர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் கருத்தரங்குகளை மதுரை மண்டல யங் இந்தியன் அமைப்பு சிறப்பாக நடத்தி வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் யங் இந்தியன் தலைவர் ஷர்மிளா தேவி தலைமையில் நடந்த கருத்தரங்கில் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சாதித்த பிரபலங்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
சேலம் ஆர்.ஆர்.பிரியாணி நிறுவனர் தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி சி.இ.ஓ குமார் சவ்ரப், சூப்பர் சரவணா ஸ்டோர் நிர்வாகி பாலகிருஷ்ணன், மெகா பவுண்டேஷன் நிறுவனர் நிர்மல் ராகவன், யூ டியூபர் மதன் கௌரி, ஸ்டார்டஜிக் நெட்வொர்க்கிங் பயிற்றுநர் பரிதோஷ் பதக், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் பாண்டியன், பாண்டம் எப்எக்ஸ் நிறுவனர் பெஜாய் அற்புதராஜ் ஆகியோர் தங்கள் அனுபவங்களையும் வழிகாட்டல்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.
இந்தக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றினார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. அவர் பேசியதாவது…
”நம் நாடு என்றும் இளமையாக இருப்பதுபோல் யங் இந்தியன் அமைப்பிலும் 25 வயது முதல் 45 வயது வரையிலான இளம் வயதினர் உள்ளனர். நாட்டில் வளர்ச்சிக்கு பல தொழில்களை உருவாக்கி வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளீர்கள்.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது சுதேசி நிறுவனமாக கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரம் பிள்ளை தொடங்கியபோது அவருக்கு வயது 25. அதே போல, 32 வயதில் ஆங்கிலேயரை போரில் வென்று 17 ஆண்டுகள் சிவகங்கை ராணியாக ஆட்சிபுரிந்து சாதனை செய்தார் வேலு நாச்சியார்.

இந்தியாவில் பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் 84 ஸ்டார்ட்அப் நிறுவனர்களில் பெரும்பாலோர் 40 வயதுக்குள்ளானவர்கள். இன்று உலகில் சிலி, நெதர்லாந்து, அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் புதிய சிந்தனையுள்ள இளைஞர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
பொதுவாக, தொழில் செய்பவர்கள் உடன் இருப்பவர்களுடன் நல்ல கம்யூனிகேஷசனுடன் இருக்க வேண்டும். சமீபத்தில் ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பையில் வெற்றி பெற்றதற்கு அவர்களிடமிருந்த நல்ல கம்யூனிகேஷனே காரணம்.
நாம் தொழிலை எதற்காக செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பதில் தெளிவாக இருந்தால் இடையில் வரும் பிரச்னைகளை சரிசெய்துவிடலாம். சிவில் சர்வீசுக்கு வருகிற பலருக்கு ஏன் வருகிறோம் என்பது தெரியாது. பலரும் பரிட்சையில் பாஸ் செய்துவிடுவார்கள். ஆனால், சர்வீசுக்கு வந்தவுடன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள். எப்போதுமே நாம் ஒரு துறைக்கு ஏன் வருகிறோம், எதற்கு வருகிறோம் என்ற தெளிவு வேண்டும்.
அதே நேரம், தொழிலில் ரிஸ்க் எடுக்க பயப்படாதீர்கள். தொழில் துறைக்கு இவ்வளவு கட்டமைப்புகள் நம் நாட்டில் உருவாக்கப்பட்டும் தனிமனித வருமானம் அமெரிக்காவைவிட 10 மடங்கு குறைவாக இருக்கிறோம். அதே நேரம், உலகளவில் தொழில்களில் நாம் முன்னணியில் உள்ளோம்.

நாம் தொழில்களைக் கற்றுக்கொள்ள சுந்தர்பிச்சை வழி, ஸ்ரீதர்வேம்பு வழி, சேலம் ஆர்.ஆர் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாகட்டி, சூப்பர் சரவணா ஸ்டோர் வழிகளைப் பின்பற்ற வேண்டும். அதைவிட்டு இன்னும் மேற்கு நாட்டு புத்தகங்களையும், அவர்களின் நிர்வாகக் கல்வியையும் படிக்கிறோம். குறிப்பிட்ட தொழில்களைத் தெரிந்துகொள்ள பெய்ரூட்டுக்கும் ஜப்பானுக்கும் செல்லுங்கள் என்கிறார்கள். தொழில்களைத் தெரிந்துகொள்ள கற்றுக்கொள்ள நம் நாட்டிலுள்ள நகரங்களுக்குச் செல்லுங்கள்.
மதுரையில் ஒருவர் தினமும் டீ, காஃபியை பிளாஸ்கில் விநியோகம் செய்கிறார். இதையெல்லாம் வெளிநாடு சென்றா கற்றுக்கொண்டார்? மும்பை டப்பா வாலாக்கள் பல இடங்களுக்கு சென்று வகுப்பெடுக்கிறார்கள். இதுதான் இந்தியத்தன்மை தொழில்முறை. இந்த இந்திய ஸ்டாண்டர்ட் மூலம் நாம் அனைத்து தொழில்களையும் வெற்றிகரமாக நடத்தலாம். வெளிநாட்டு முறையை ஃபாலோ பண்ணத் தேவையில்லை. அதுபோல் தொழில் செய்வோர் கூடுதலாக சில மொழிகளைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

தமிழகம் புதிய தலைமுறை பொருளாதாரத்திற்கு இன்னும் மாறவில்லை. பெங்களூரு,புனே, குர்கான் மாற ஆரம்பித்துவிட்டது. கடந்த ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தில் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் மிகவும் குறைவு.
புதிய தொழிலைத் தொடங்குபவர்களிடம் ஒவ்வொரு துறையிலும் லஞ்சம் கொடுத்தால்தான் சான்றிதழ் வழங்கும் மோசமான நடைமுறையை உடைக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் புதுத் தலைமுறை நிறுவனங்கள் அதிகம் உருவாகும். ஆனால், இவை தமிழகத்திற்கு வர தயங்குகிறது. இதை மாற்ற வேண்டும்.
ஆர்டிபிசியல் இண்டெலிஜெண்ட், நியூரோ நெட்வொர்க் போன்ற ஸ்டார்ட் அப்களை தமிழகத்துக்கு கொண்டு வரவேண்டும். ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் நஷ்டமடைந்தால் அதற்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும்” என்று பேசி முடித்தார் அண்ணாமலை.