வீட்டிற்கு ஒரு விமானம் வைத்திருக்கும் கிராமம்…எங்கே?

கலிபோர்னியா,

முந்தைய காலத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல கால்நடையாகவும் மாட்டு வண்டிகளிலும் சென்று வந்தனர். நாளடைவில் பொது போக்குவரத்து, சைக்கிள், ஆட்டோ ரிக்ஷா, கார் என போக்குவரத்து வாகனங்கள் அதிகரித்து வருகின்றன.

ஒவ்வொரு வீட்டிலும் சைக்கிள் இருந்த காலம் போய் டூவிலர்கள் வந்தன. தற்போது அவையும் போய் கார்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. காற்று மாசு, போக்குவரத்து பாதிப்பு என இருந்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சொகுசாக காரில் பயணிப்பதையே பலரும் விரும்புகின்றனர்.

இந்தநிலையில் அமெரிக்காவில் ஒரு கிராமத்தில் வீட்டிற்கு ஒரு விமானம் இருக்கிறதாமே தெரியுமா? ஆம்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கேமரூன் ஏர்பார்க் என்ற கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக விமானத்தை பயன்படுத்தி வருகிறார்களாம்.

இந்த கிராமத்தில் வேலைக்கு செல்லவும் அலுவலகத்திற்கு செல்லவும் விமானத்தில்தான் பயணிக்கிறார்களாம். அந்த தெருவை கழுகு பார்வையில் பார்த்தால் விமான நிலையம்போல் காட்சியளிக்கிறது.

விமானம் வைத்திருக்க விமான ஓட்டிகளுக்கான லைசன்ஸ் மற்றும் விமானத்தை இயக்குவது குறித்த விவரங்களை தெரிந்தவர்கள் மட்டுமே விமானம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த கேமரூன் ஏர்பார்க்கில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற விமானிகளாக இருக்கிறார்கள்.

இவர்களுடன் மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களும் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் 1963 -ம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது. இங்கு மொத்தம் 124 வீடுகள் உள்ளன. விமானங்களை தங்கள் வீடுகளுக்கு முன்பாக தரையிறக்கவும் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு எளிதாக செல்லவும் 100 அடி அகலத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்கா, விமானங்களின் செயல்பாட்டை ஊக்குவித்தது. இந்த நிலையில்தான் இந்த விமான நிலையங்களை ஓய்வு பெற்ற ராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமான பூங்காவாக மேம்படுத்த அந்த நாட்டின் விமான போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதனால்தான் கேமரூன் ஏர்பார்க் கிராமத்தில் வீட்டிற்கு ஒரு விமானம் வைத்திருக்கிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.