மும்பை அருகில் உள்ள டிட்வாலா என்ற இடத்தில் வசிப்பவர் சித்தார்த். இவர் தனது மனைவியிடம் அவரது பெற்றோரிடமிருந்து பணம் வாங்கி வரும்படி அடிக்கடி கூறி சண்டையிடுவாராம். இதையடுத்து அவரின் மனைவி தனது பெற்றோரிடம் ரூ.80 ஆயிரம் வாங்கிக்கொண்டு வந்துள்ளார். ஆனால், புதிய ஆட்டோ வாங்க மேலும் 2 லட்சம் வாங்கி வரும்படி தனது மனைவியிடம் கேட்டு சித்ரவதை செய்து வந்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சித்தார்த் தனது மனைவியின் தலையில் இரும்பு கம்பியால் அடித்தார். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

அதனை தொடர்ந்து உடலை மிகப்பெரிய டிரம் ஒன்றில் வைத்து அதனை தனது ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள அம்பர்நாத் வனப்பகுதியில் கொண்டு போய் போட்டுவிட்டார். இதனிடையே சித்தார்த்தின் மனைவியை அவரது தாயார் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து சித்தார்த்திற்கு போன் செய்து தனது மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார். உடனே, “நான் உங்களது மகளை கொலை செய்து உடலை காட்டில் போட்டுவிட்டேன்” எனத் தெரிவித்தார். இதையடுத்து இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் சித்தார்த்தை கைது செய்து காட்டில் வீசப்பட்ட உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஐஸ் கிரீம் வாங்க சென்ற சிறுமி மாயம்
மும்பையின் மற்றொரு பகுதியான வசாயில் தனது பெற்றோருடன் வசிக்கும் ரோஷ்னி என்ற 8 வயது சிறுமி ஐஸ் கிரீம் வாங்க கடைக்கு சென்றார். அவர் அதன் பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. ரோஷ்னியை கண்டுபிடித்து கொடுத்தால் 20 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அச்சிறுமியின் பெற்றோர் துண்டுபிரசுரம் அச்சடித்து அப்பகுதியில் விநியோகம் செய்தனர். அப்படி இருந்தும் சிறுமி காணாமல் போய் இரண்டு நாட்களாகியும் எங்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் வசித்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருந்து கெட்ட வாசனை வீச ஆரம்பித்தது. உடனே அந்த வீட்டை திறந்து பார்த்தபோது உள்ளே சாக்குமூட்டை ஒன்றில் ரோஷ்னியின் உடல் இருந்தது. சிறுமியின் கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. உடல் அழுக ஆரம்பித்திருந்தது. போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். ரோஷ்னியின் பெற்றோர் வசித்த வீட்டுக்கு பக்கத்து வீடு காலியாகத்தான் இருந்தது. அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.