சட்டை பாக்கெட்டில் 1 லட்சம் ரூபாய்… பணம் இருந்தும் பசியால் உயிரிழந்த குஜராத் யாசகர்!

குஜராத் மாநிலம், வல்சாட் என்ற இடத்தில் அங்குள்ள நூலகம் ஒன்றுக்கு அருகில் சாலையோரம் இரண்டு நாள்களாக யாசகர் ஒருவர், நடக்க முடியாமல் படுத்துக்கிடந்தார். அருகிலுள்ள கடைக்காரர் இதைப் பார்த்துவிட்டு, இது குறித்து 108-க்கு போன் செய்து தகவல் கொடுத்தார். உடனே மருத்துவ ஊழியர்கள் ஆம்புலன்ஸில் வந்து, அந்த யாசகரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததும் டாக்டர்களிடம்,, யாசகர் தேநீர் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரைப் பார்க்க பல நாள்கள் சாப்பிடாமல் இருந்ததுபோல் தெரிந்தது.

உடனே அவருக்கு டாக்டர்கள் சாலைன் ஏற்றினர். ஆனால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் இறந்து போனார். இது குறித்து டாக்டர் கிருஷ்ணா படேல் கூறுகையில், “நோயாளி பல நாள்கள் சாப்பிடாமல் இருந்திருப்பார்போல் தெரிகிறது” என்றார். இறந்துபோன யாசகர் அணிந்திருந்த சட்டை மற்றும் ஸ்வட்டர் பாக்கெட்களில் சிறிய சிறிய பிளாஸ்டிக் பேக்குகளில் பணத்தை அடைத்து வைத்திருந்தார். 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் 38 இருந்தன.

இது தவிர 200 ரூபாய் நோட்டுகள் 83 இருந்தன. அதோடு 100, 20, 10 ரூபாய் நோட்டுகள் 537 இருந்தன. அவை மொத்தம் 1.14 லட்சம் இருந்தது. யாசகர் சம்பாதித்தும், சாப்பிடப் பயன்படுத்தாமல் வைத்திருந்த பணத்தை டாக்டர்கள் உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அதனை தரம் பிரித்து பண்டலாக அடுக்கி எடுத்துச் சென்றனர்.

யாசகரிடம் இருந்த பணம்

இறந்துபோன யாசகர் பெயர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவரது பெயர் அல்லது உறவினர் யாராவது அடையாளம் காணப்பட்டால், அவர்களிடம் இந்தப் பணம் ஒப்படைக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

அவரது புகைப்படத்தை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனையில் அவர் பசியால் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. யாசகர் குறித்து தகவல் கொடுத்த கடைக்காரரிடமும் போலீஸார் வாக்குமூலம் வாங்கினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.