IPL 2024 : நல்ல பவுலரை கழற்றிவிட்ட ஆர்சிபி..! 2 கோடிக்கு என்டிரி செய்த பவுலர் – நஷ்டம் யாருக்கு?

ஐபிஎல் 2024 மினி ஏலம் இன்னும் இரு வாரங்களில் துபாயில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்கும் 10 ஐபிஎல் அணிகளும் முக்கிய வீரர்களுக்கு குறி வைத்து காய்களை நகர்த்த திட்டமிட்டுள்ளனர். அதற்கேற் தங்களது அணியில் இருக்கும் காஸ்டிலி பிளேயர்களை ஏலத்துக்கு முன்பே கழற்றிவிட்டுள்ளனர். அதில் ஒருவர் தான் ஜோஸ் ஹேசில்வுட். ஆர்சிபி அணியில் 7.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அந்த அணியில் விளையாடிக் கொண்டிருந்த அவர், இப்போது ஏலத்துக்கு வந்திருக்கிறார். உலக கோப்பையிலும் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக ஆடிய அவரை ஆர்சிபி அணி ஏன் கழற்றிவிட்டது என்பது தான் பலருக்கும் இருக்கும் கேள்வி.   

ஆனால் ஆர்சிபி அணி இதனையெல்லாம் யோசிக்காமல் இல்லை. ஹேசில்வுட் ஐபிஎல் 2024 தொடரின் முதல் பாதியில் ஆடமாட்டார் என்பதால் இந்த கடினமான முடிவை எடுத்திருக்கிறது ஆர்சிபி. மார்ச் மாதத்தில் ஹேசில்வுட்டுக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. இதற்காக குடும்பத்துடன் இருக்க திட்டமிட்டுள்ள அவர், ஐபிஎல் பிற்பகுதியில் திரும்ப இருக்கிறார். இதனை தெரிந்து கொண்ட ஆர்சிபி அணி இதற்கு எதுக்கு 7.75 கோடி செலவழிக்க வேண்டும் என யோசித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர் வரும் வரை வேறு யாரை அணியில் வைத்துக் கொள்வது என்று தீவிரமாக யோசித்து ஏலத்தில் புதிய பிளேயரையே எடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது.

ஆர்சிபி மேனேஜ்மென்ட் கணக்குப்படி பண ரீதியாக அந்த அணிக்கு லாபம் தான். அத்துடன் பிளேயராக பார்க்கும்போது அவர் ஒரு சில போட்டிகள் விளையாடமாட்டார் என்பதால் அது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பது ஒருவகையில் இன்னொரு நஷ்டம். இதனை யோசித்து லாப கணக்கில் சிந்தித்து இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடும் நல்ல பவுலர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தட்டி தூக்க ரெடியாக இருக்கிறது ஆர்சிபி. 

பேட்டிங் பொறுத்தவரையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கவலையில்லை. இப்போது அந்த அணிக்கு கவலையாக இருப்பது பந்துவீச்சு தான். அதனால் ஏலத்தில் எப்போதெல்லாம் பந்துவீச்சாளர்கள் வருகிறார்களோ அப்போதெல்லாம் கோதாவில் குதித்துவிடும். அதில் யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்பதை ஐபிஎல் மினி ஏலத்தில் பார்க்கலாம். அதேநேரத்தில் ஹேசில்வுட் ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்பதில் உறுதியாக இருக்கிறார். அவர் தன்னுடைய அடிப்படை விலையாக 2 கோடி நிர்ணயித்து பெயரை ஏலத்துக்கு பதிவு செய்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.