மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக வேளச்சேரி, தாம்பரம், வடசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பேரிடர் மீட்புக் குழுவினர், மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொண்டு, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைத் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளிலிருக்கும் மக்களுக்கு வழங்கிவருவதாகக் கூறினாலும், பல்வேறு இடங்களில் உணவே கிடைக்கவில்லை என மக்கள் கூறிவருகின்றனர். சில இடங்களில் போராட்டமும் நடத்திவருகின்றனர்.
இன்னொருபக்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், திரைப் பிரபலங்கள் போன்றோர், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் சிக்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருகின்றனர். அந்த வரிசையில், திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளித்துவரும் சின்னத்திரை பிரபலம் அறந்தாங்கி நிஷா, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளுக்கு உணவே வரவில்லை என்றும், மக்களுக்கு உதவி தேவைப்படுவதாகவும் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில், “மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளுக்கு உணவு வரவே இல்ல. நாங்க கொண்டுவந்ததும் முடிஞ்சுபோச்சு. இங்க நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. இந்தப் பகுதில இருக்றவங்க கொஞ்சம் உதவி பண்ணுங்க. இந்தப் பக்கம் வர்றவங்க, மடிப்பாக்கம், பாலாஜி, நகர், வேளச்சேரி, சதாசிவம் நகர் பகுதிக்கு வாங்களேன்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.