இந்திய தேர்தல் ஆணையம் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான தேதியை அறிவித்தது முதல் அதுகுறித்த எதிர்பார்ப்பு எகிறியது. இதற்கு அவ்வப்போது வெளியான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே அமைந்திருந்தது. கூடவே அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான செமி ஃபைனல்ஸ் ஆகவும், இந்த தேர்தல் பார்க்கப்பட்டதும் மற்றொரு காரணம். முடிவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களை கைப்பற்றி தனக்கு எதிரான அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளையும் தவிடுபொடி ஆக்கியது, பா.ஜ.க. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் நான்கு ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

ஆனால் ஜோதிராதித்ய சிந்தியாவைத் தங்கள் பக்கம் இழுத்து, மீண்டும் ஆட்சி அமைத்தது பா.ஜ.க. எனவே இந்தமுறை காங்கிரஸ் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 163 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது பா.ஜ.க. இதேபோல் ராஜஸ்தானில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. இருப்பினும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. இது மக்களிடத்தில் அதிருப்தியை சம்பாதிக்க செய்தது. எனவே பா.ஜ.க, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. இருப்பினும் காங்கிரஸ் பக்கம்தான் காற்று வீசுவதாக அரசியல் நோக்கர்கள் கூறி வந்த நிலையில், 115 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க வெற்றியை சுவைத்தது.

இதேபோல் சத்தீஸ்கரில் 54 இடங்களை கைப்பற்றி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறது, பாஜக. இவ்வாறு மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தாலும் தெலங்கானாவில் தோல்வியை சந்தித்திருக்கிறது, அந்த கட்சி. தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெறலாம் என நினைத்திருந்த சந்திரசேகர ராவின் திட்டத்தை தவிடுபொடி ஆகியிருக்கிறது, காங்கிரஸ். ஏற்கெனவே கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற பாஜகவின் கனவும் கைகொடுக்கவில்லை. இதன் மூலம் அமித் ஷாவின் `மிஷன் சவுத்’ பிளான்? காலியானதா என்ற கேள்வியை மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியனிடம் முன்வைத்தோம்.
“தென் மாநிலங்கள் பா.ஜ.க இல்லை என்பதை விட கடலோர மாநிலங்கள் அனைத்திலும் அந்த கட்சி இல்லை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என எங்கும் அவர்கள் ஆட்சியில் இல்லை. புதுச்சேரியில் கூட்டணியில் இருக்கிறார்கள். இதேநிலைதான் 2024 தேர்தலில் இருக்குமா என உறுதியாக கூற முடியாது. இந்தியா கூட்டணி ஒன்றாக இணைத்து தேர்தலை சந்தித்தால் வெற்றி நிச்சயம். தென் இந்தியாவில் 139 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. வரும் தேர்தலில் அவர்கள் 15 இடங்களை பிடித்தாலே பெரிய விஷயம்.

கர்நாடகாவில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். இருப்பினும் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பொழுது வெற்றி பெறுவதற்கும், அதே நேரத்தில் திட்டம் தோல்வியை சந்திப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. 10 ஆண்டுகால அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். எனவே ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற மனநிலை மக்கள் மத்தியில் இருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி இந்தியா கூட்டணி வெற்றி வியூகம் அமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் மக்களை வாக்குகளாக மாற்றுவதில் பாஜகவின் திட்டம் வெற்றி பெறுகிறது. காங்கிரஸுக்கு மக்களிடத்தில் ஆதரவு இருந்தாலும் அதை வாக்காக மாற்றுவதில் தோல்வியடைந்து வருகிறார்கள். கீழ்மட்ட கட்டமைப்பு காங்கிரஸிடம் சரியாக இல்லை. மேலும் மூன்று மாநிலங்களில் அவர்கள் தோல்வியடைந்ததற்கு, உட்கட்சி மோதலும் மிக முக்கிய காரணம். இதுபோன்ற விஷயங்களை இரும்புக்கரம் கொண்டு, மேலிடம் அடக்க வேண்டும். ஆனால் அவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள். தென் மாநிலங்கள் அமித்ஷாவின் திட்டம் உடனடியாக எடுபடாது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, தெலங்கானாவில் அவரது `மிஷன் சவுத்’ தோல்விதான். ஆந்திராவில் வேண்டுமானால் கூட்டணி வைத்து ஆட்சியமைக்கலாம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.