மும்பையில் உள்ள தாராவியில் இருக்கும் குடிசைகளை இடித்துவிட்டு அங்கு அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டும் பொறுப்பு டெண்டர் மூலம் அதானி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதானி நிறுவனத்திற்கு இப்பணியை கொடுத்து அந்நிறுவனம் பயனடையும் வகையில் விதிகளில் மாநில அரசு திருத்தம் செய்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பாக தாராவி தொகுதி எம்.எல்.ஏ.வர்ஷா கெய்க்வாட் ஏற்கனவே போராட்டம் நடத்தி இருக்கிறார். தற்போது உத்தவ் தாக்கரேயும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ”மாநில அரசு அதானி நிறுவனத்திற்கு சாதகமாக விதிகளில் திருத்தம் செய்திருக்கிறது.

தாராவி மக்களுக்கு 350 சதுர அடி வீடு போதுமானது கிடையாது. 400 முதல் 500 சதுர அடி வீடு கொடுக்கவேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தாராவி மக்களுக்கு தாராவிலேயே மாற்று வீடு கட்டிக்கொடுக்கவேண்டும். குடிசை மேம்பாட்டுத் திட்டத்தில் 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் குடிசைகள் இலவச வீடு பெற தகுதியற்றதாக இருக்கிறது. தாராவி திட்டத்தில் கிடைக்கும் டி.டி.ஆர்.களை அதானிக்கு கொடுக்காமல் மாநில அரசே விற்பனை செய்யவேண்டும். இதற்காக வரும் 16-ம் தேதி தாராவியில் இருந்து அதானி அலுவலகத்திற்கு பேரணி நடத்த இருக்கிறோம்.
அதானி நிறுவனம் எவ்வாறு பயனடையவேண்டும் என்பதை திட்டமிட்டு டி.டி.ஆர். உருவாக்கப்பட்டுள்ளது. தாராவியை மேம்படுத்தவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆனால் அதற்கான ஒப்பந்தம் வழங்க பின்பற்றப்பட்ட நடைமுறைகள் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. மும்பையை அதானிக்கு தாரைவார்க்க சிவசேனா அனுமதிக்காது” என்று தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரேயின் போராட்டம் குறித்து மும்பை பா.ஜ.க.தலைவர் அசிஷ் ஷெலார் கூறுகையில், ”மும்பையின் வளர்ச்சித் திட்டத்திற்கு உத்தவ் தாக்கரே எப்போதும் இடையூறாக இருக்கிறார். இதற்கு முன்பு மும்பை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கார்ஷெட் அமைத்த போது அதற்கு இடையூறு ஏற்படுத்தினார். கடற்கரை சாலை திட்டம் வந்த போது போலியான செய்திகளை இவர்கள் பரப்பினர். இப்போதும் அதைத்தான் செய்கின்றனர். வளர்ச்சித் திட்டங்களை நிறுத்தி கமிஷன் வாங்கவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்” என்று தெரிவித்தார்.
தாராவியில் இப்போது 50 முதல் 60 ஆயிரம் குடிசைவாசிகள் மட்டுமே இலவச வீடு பெற தகுதியானர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலவச வீடு பெற தகுதியற்றவர்களிடம் நிலம் மற்றும் கட்டுமான செலவை மட்டும் வாங்கிக்கொண்டு அவர்களுக்கும் வீடு கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்து இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு வீடு தாராவியில் ஒதுக்கப்படாது.

தாராவியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அவர்களுக்கு வீடு ஒதுக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தாராவியில் வசிக்கக்கூடிய மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோரை தாராவியை விட்டு வேறு இடத்திற்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. தாராவியில் 2011ம் ஆண்டு வரை கட்டப்பட்ட குடிசைவாசிகளுக்கு இலவச வீடு தாராவியில் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்து இருக்கிறது. மற்றவர்களுக்கு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படும்.
ஆனால் அவர்களிடம் குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படும். தாராவி மக்கள் தங்களுக்கு தாராவியிலேயே வீடு கொடுக்கவேண்டும் என்று கோரிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்போது தாராவி மக்களில் பாதிப்பேரை அங்கிருந்து அப்புறப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.