புதுடெல்லி: தமிழகம், ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரியில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலில் காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களத்தில் அயராது பணியாற்றி வருவதாகவும், நிலைமை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை தங்கள் பணிகளைத் தொடர்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் மிக்ஜாம் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. இந்தப் புயலால் காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களத்தில் அயராது பணியாற்றி வருகின்றனர், நிலைமை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அவர்கள் தங்கள் பணிகளைத் தொடர்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடந்த சில நாட்களாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் செவ்வாய்க்கிழமை மாலை ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. இதனால், ஆந்திராவில் பல ஏக்கர் விவசாய பயிர்கள் நாசம் அடைந்தன. நெல்லூர் மற்றும் திருப்பதி ஆகிய நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இந்நிலையில், மிக்ஜாம் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமான நிலையில் அது மேலும் வலுவிழந்து இன்னும் ஒருசில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு நிலையாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டு ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல சூழ்ந்தது. பஸ், ரயில் மற்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனால் கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில், குறிப்பாக சென்னையில் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல், ஆந்திராவில் 40 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளதாக ஆந்திர முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 194 கிராமங்கள், இரு பெரிய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், 25 கிராமங்கள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.