வடகொரியாவில் 1970 முதல் 1980 காலகட்டங்களில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1990- களில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் வடகொரியாவில் மக்கள் தொகை கணிசமான அளவு குறைந்தது. அதற்குப் பிறகு, மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு வீட்டு வசதிகள், மருத்துவ உதவிகள், கல்வி மற்றும் உணவு போன்றவை இலவசமாக வழங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் அறிக்கையின் படி, 2023-ம் ஆண்டு வரை, வட கொரியாவின் கருவுறுதல் விகிதம் 1.8 எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், வட கொரியாவின் சில அண்டை நாடுகளைக் கவனிக்கும் போது இது அதிகம். குறிப்பாக தென் கொரியாவின் கருவுறுதல் விகிதம் கடந்த ஆண்டு 0.78 என்றும், ஜப்பானின் கருவுறுதல் விகிதம் 1.26 எனவும் குறைந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பியாங்யாங்கில் தேசிய தாய்மார்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன், “என் அன்புத் தாய்மார்களே… நமது நாட்டின் பிறப்பு விகிதம் குறைவதைத் தடுப்பதும், குழந்தைகளை நல்லமுறையில் பராமரிப்பதும் நமது அடிப்படை கடமைகள். எனவே, ஆரோக்யமான குழந்தைகளை வளர்ப்பதும், அவர்கள் மூலம் நமது கருத்துக்களை உறுதியாக முன்னெடுத்துச் செல்வதின் தேவையும் அதிகரித்திருக்கிறது.

சமீபகாலமாக அதிகரித்து வரும் சோசலிசமற்ற பழக்கவழக்கங்களை ஒழித்து, குடும்ப நல்லிணக்கம், சமூக ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும். அதன் மூலம், பண்பாடு, ஒழுக்கம் நிறைந்த வாழ்விற்கான சிறந்த வழியை உருவாக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் உதவி, முன்னோக்கிச் செல்வதும் அவசியம். எனவே, நமது நாட்டில் குறையும் பிறப்பு விகிதத்தைத் தடுத்து, குழந்தைகளை நன்றாகக் கவனித்து, அவர்களுக்குத் தேவையான கல்வி வசதிகளை ஏற்படுத்தித் தருவதே நமது முக்கிய கடமையாகும்” எனக் கூறி, கண்ணீர் விட்டு அழுதார். அதைப் பார்த்த மற்றப் பெண்களும் கண்கலங்கினர்.
Kim Jong Un just started crying on national TV because people are not having enough babies pic.twitter.com/IJd3u2M6An
— Matt Wallace (@MattWallace888) December 5, 2023
இதற்கு முன்னர் இதே கோரிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் தனது நாட்டு மக்களுக்கு முன்வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.