70 ஆண்டு காலமாக உள்ள பிரிவினைவாதம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: பிரிவினைவாத கொள்கை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக, 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அறிவித்தனர். இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து உள்ளது. காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

முன்னதாக கடந்த செப்டம்பரில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி சார்பில் 14 நிருபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிருபர்களுக்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் பேட்டி அளிக்கக் கூடாது. அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர், இண்டியா டுடே தொலைக்காட்சியின் மூத்த நிருபர் ஷிவ் ஆரூர்.

மூன்று மாநிலங்களில் பாஜகவின் வெற்றி, காங்கிரஸின் தோல்வி குறித்து ஷிவ் ஆரூர் கடந்த 4-ம் தேதி இண்டியா டுடே தொலைக்காட்சியில் தெளிவான விளக்கம் அளித்தார்.

நிருபர் விளக்கம்: அவர் கூறும்போது, “வடஇந்திய மக்களை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். காங்கிரஸ் ஆதரவு அரசியல் விமர்சகர்கள், அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தினர். அரசியல் நாகரிகத்தை பின்பற்றாமல் பிரதமர், பாஜக தலைவர்களை விமர்சனம் செய்தனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. அவற்றை முறியடித்து பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறது” என்று தெரிவித்தார்.

இண்டியா டுடே நிருபர் ஷிவ் ஆரூரின் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அவர்களின் (காங்கிரஸ்) ஆணவம், பொய்கள், அவநம்பிக்கை, அறியாமை ஆகியவற்றில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும். ஆனால் அவர்களின் பிரிவினைவாத கொள்கை குறித்து மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இது அவர்களின் 70 ஆண்டு கால வழக்கம். அவ்வளவு எளிதாக அவர்களை விட்டு விலகாது.

இதேபோல பல்வேறு அழிவுகளை அவர்கள் ஏற்படுத்தக்கூடும். அவற்றை பொதுமக்கள் தங்கள் ஞானத்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.