சபரிமலை:சபரிமலையில், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சன்னிதானம் பெரிய நடை பந்தலில் தனி, ‘கியூ’ ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலையில் நடப்பு மண்டல சீசனில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் திருப்பதி மாடலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுப்பப்படுகின்றனர். மர கூட்டத்திலிருந்து சன்னிதானத்துக்கு சரங்குத்தி வழியாக செல்லும் போது, ஆறு கியூ காம்ப்ளக்ஸ்களில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு, அங்கிருந்து ஒவ்வொரு கட்டமாக அனுப்பப்படுகின்றனர்.
பின், இவர்கள் பெரிய நடைபந்தலில் உள்ள கியூவில் காத்து நின்று, 18 படிகள் ஏற வேண்டும். இதில் ஒரு கியூ, குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுடன் அவரது பெற்றோர் ஒருவரும் அனுமதிக்கப்படுவர்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்வால் சோர்வடைந்தோர் இந்த கியூவில் அனுமதிக்கப்படுவர். இவர்கள் அதிக நேர காத்திருப்பு இல்லாமல், 18 படிகள் ஏறி சென்று தரிசனம் நடத்த முடியும்.
சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ேஹாட்டல்களில் உணவு தரத்தை கண்காணிக்கவும், பக்தர்களின் புகார்களை கேட்கவும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள், புகார்களை 98471 02687, 97456 02733 மொபைல் போன் எண்களில் தெரிவிக்கலாம்.
மலை அணில் கடித்து இருவர் காயம்
சபரிமலையில் மரக்கூட்டம் – சன்னிதானம் இடையிலான சந்திராங்கதன் ரோட்டோர மரங்களில் கருங்குரங்குகள் மற்றும் மலை அணில் அதிக அளவில் இருக்கும். பக்தர்கள் கொடுக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடும்.இது, பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் ஆபத்தானது என, வனத்துறை எச்சரித்து வருகிறது.
காட்டு விலங்குகளுக்கு உணவு வழங்க முயற்சிக்க வேண்டாம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. எனினும், பக்தர்கள் இவற்றிற்கு தொடர்ந்து உணவு வழங்குகின்றனர். நேற்று முன்தினம் இதுபோல ஒரு மலை அணில், சிறுமியின் கையில் இருந்த பழத்தை பறிக்க முயன்ற போது அதை விரட்டிய வனத்துறை ஊழியரை கடித்தது. அதுபோல, கண்ணுாரைச் சேர்ந்த பக்தரையும் அணில் கடித்தது.இருவரும் சன்னிதானம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெறிநாய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட பின், கோட்டயம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement