அணியுடன் செல்லாத இந்த வீரர்… இந்தியாவுக்கு பெரிய பின்னடைவு – காரணம் என்ன?

India National Cricket Team: இந்திய சீனியர் ஆடவர் அணி (Team India), தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் உள்ளிட்டவைகளை இரு அணிகளும் அங்கு விளையாட உள்ளன. 

உலகக் கோப்பை தொடருக்கு (ICC World Cup 2023) பின் இந்திய அணியின் மீது பெரும் எதிர்பார்ப்புள்ள சுற்றுப்பயணம் இதுவாகும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா கைப்பற்றினாலும், இந்திய துணைகண்டத்துக்கு வெளியே நீண்ட நாளுக்கு பின் இந்திய அணி விளையாட உள்ளதுதான் இந்த எதிர்பார்ப்புக்கு காரணம் எனலாம்.

எப்படி இருக்கப்போகிறது பிளேயிங் லெவன்?

முதலில் டி20 தொடர் (IND vs SA T20 Series) நடைபெறுவதையொட்டி பலரின் கவனமும் அதில்தான் உள்ளது. குறிப்பாக, அடுத்தாண்டு ஜீன் மாதத்தில் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை குறிவைத்து இந்திய அணி வடிவமைக்கப்பட்டு வருகிறது. டி20 தொடரை பொறுத்தவரை ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், பும்ரா, ஷமி ஆகியோர் இடம்பெறவில்லை.

ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) காயத்தில் இருந்து மீளாததால் சூர்யகுமார் யாதவே கேப்டனாக தொடர்கிறார். துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்படுகிறார். உலகக் கோப்பை தொடரில் விளையாடிய கில், குல்தீப் யாதவ் உள்ளிட்டோரும் டி20 அணிக்கு திரும்பி உள்ளனர். இவர்களுக்கு இடையில் பிளேயிங் லெவனை இந்திய அணி எப்படி அமைக்கப்போகிறது என்பதே பெரிய கேள்வியாக உள்ளது எனலாம். 

பந்துவீச்சில் சிக்கல்?

குறிப்பாக, ஆஸ்திரேலிய தொடரில் யஷஸ்வி ஜெயஸ்வால் – ருதுராஜ் கெய்க்வாட்டின் ஓப்பனிங் அருமையாக இருந்தது. கில்லின் வருகை இந்த கூட்டணியை பாதிக்கலாம். மேலும், ஷ்ரேயாஸின் வருகை திலக் வர்மாவை பெவிலியனில் அமரவைக்கும் என்பதை ஆஸ்திரேலிய தொடரிலேயே நாம் பார்த்திருப்போம். ஜித்தேஷ் சர்மாவா அல்லது இஷான் கிஷானா என்ற விவாதம் இந்த முறையும் தொடரும் எனலாம். இப்படியிருக்க சூழற்பந்துவீச்சில் ஜடேஜா இணைந்துள்ளார். பிஷ்னோய், குல்தீப் என நல்ல ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். வேகப்பந்துவீச்சில் சிராஜ், முகேஷ் குமார், தீபக் சஹார், அர்ஷ்தீப் சிங் என வேகக்கூட்டணியும் இருக்கிறது. 

தென்னாப்பிரிக்கா என்பதால் மூன்று வேகப்பந்துவீச்சாளர், ஒரு ஆல்ரவுண்டர், ஒரு முழு நேர ஸ்பின்னருடன் பிளேயிங் லெவனை அமைக்க இந்தியா நினைக்கும். இல்லை கூடுதல் பந்துவீச்சு ஆப்ஷன் வேண்டுமா என்பதை சூழலை பொறுத்து அமைத்துக்கொள்ளும். ஆனால் தற்போது இந்திய அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தந்தைக்காக…

தீபக் சஹார் அவரது தந்தை லோகேந்திர சாஹரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை கவனித்துக்கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியை தவறவிட்டார். இந்த நிலையில், இந்திய அணி தென்னாப்பிரிக்கா புறப்படும் நிலையில், அணியிடன் தீபக் சஹார் செல்வது சந்தேகமாகியுள்ளது.

இதுகுறித்து ஊடகம் ஒன்றிடம் பேசிய தீபக் சஹார் (Deepak Chahar),”தந்தையின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. கிரிக்கெட்டை விட எனது தந்தை எனக்கு முக்கியம், அதனால்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை நான் தவறவிட்டேன். அவர்தான் எனக்கு அனைத்தும். அவரை இப்படி ஒரு நிலையில் விட்டுவிட முடியாது. எனவே, நான் என் தந்தையுடன் தங்க முடிவு செய்தேன். தந்தை குணமடைந்த பிறகு பயிற்சியைத் தொடங்குவேன். இதுகுறித்து அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளேன். விளையாட்டை விட மகனாக தந்தைக்கு ஆற்ற வேண்டிய கடமைகள்தான் எனக்கு முக்கியம்” என தெரிவித்திருந்தார். 

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் (டிச. 5) இரவு தென்னாப்பிரிக்கா புறப்பட்டது. தீபக் சாஹர் இந்திய அணியுடன் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீபக் சஹார் இல்லாதது வேகப்பந்துவீச்சில் பின்னடவை ஏற்படுத்தலாம். இருப்பினும், சிராஜ் – அர்ஷ்தீப் சிங் – முகேஷ் குமார் கூட்டணி சிறப்பாக செயல்படும் எனலாம். தீபக் சஹார் ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.