அமெரிக்கரை கொல்ல சதி என்ற குற்றச்சாட்டு: விசாரணைக் குழு அமைக்கப்பட்டதாக ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி: அமெரிக்க குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பயங்கரவாதியை கொலை செய்வதற்கான சதியில் நிகில் குப்தா என்ற இந்தியர் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் கனடா நாட்டின் குடியுரிமையைப் பெற்ற காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னு என்பவரை நியூயார்க்கில் வைத்து கொலை செய்ய இந்திய அதிகாரியுடன் இணைந்து நிகில் குப்தா என்ற இந்தியர் முயன்றதாக அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதேபோன்ற ஒரு குற்றச்சாட்டை கனடாவும் ஏற்கெனவே இந்தியா மீது வைத்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் எழுப்பிய சிபிஐ(எம்) கட்சி எம்.பி ஜான் பிரிட்டாஸ், இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ”அமெரிக்கா உடனான இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக சில தகவல்களை அந்நாடு எங்களுக்கு வழங்கியுள்ளது. அந்த தகவல்கள் கவலை அளிப்பவையாக உள்ளன. ஏனெனில், அவை கடத்தல் மற்றும் பிற விஷயங்களுடன் தொடர்புடையவை. இது, நமது தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கனடாவைப் பொறுத்த வரையில், குறிப்பிட்ட ஆதாரங்களோ தகவல்களோ நமக்கு வழங்கப்படவில்லை. எனவே, கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கவில்லை . இது இரண்டு நாடுகளிடையே பாரபட்சமான அணுகுமுறை கிடையாது. ஆதாரங்கள் அளித்தவர்களையும்; அளிக்காதவர்களையும் ஒரே மாதிரியாகக் கருத முடியாது” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.