நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிக கவனம் பெற்ற மாநிலங்களில் ஒன்று வடகிழக்கு மாநிலமான மிசோரம். ஆட்சியிலிருந்த மிசோ தேசிய முன்னணியும், கூட்டணியிலிருந்த பா.ஜ.க-வும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களைக் கைப்பற்றி, அமோக வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. ஜோரம் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பேரில் வன்னேசங்கி (Baryl Vanneihsangi – 32) மிசோரத்தின் இளம் எம்.எல்.ஏ எனும் சிறப்பைப் பெற்றிருக்கிறார்.

இவர், மேகாலயாவின் ஷில்லாங்கிலுள்ள நார்த் ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு, பிரபல தொலைக்காட்சியிலும், ரேடியோவிலும் தொகுப்பாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார். சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான இவர், சுமார் 2.50 லட்சத்துக்கும் அதிகமான Follower-களைப் பெற்றிருக்கிறார். இந்தத் தேர்தலுக்கு முன்பே, பேரில் வன்னேசங்கி ஐஸ்வால் நகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
இந்த நிலையில்தான், ஐஸ்வால் தெற்கு-III தொகுதியில், மிசோ தேசிய முன்னணிக் கட்சியைச் சேர்ந்த லால்னுன்மாவியாவை ( Lalnunmawia) எதிர்த்துப் போட்டியிட்டார். இதில், 1,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார்.

இவர் தனது தேர்தல் வெற்றியைப் பற்றிப் பேசும்போது, “நாம் செய்ய விரும்புவதைச் செய்வதற்கு நமது பாலினம் தடையல்ல என்பதை அனைத்துப் பெண்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். நாம் எந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், விரும்புவதை சரியானதைச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.