வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த வேளச்சேரி எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்

சென்னை: சென்னை வேளச்சேரி பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற அத்தொகுதி எம்எல்ஏ ஹசன் மவுலானாவிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிக்ஜாம் புயல் சென்னையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டு ஆந்திராவில் கரையை கடந்தது. சென்னையில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. மழை ஓய்ந்து நான்கு நாட்கள் கடந்த பிறகும் தற்போது வரை வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து கொண்டதால் மக்கள் கடும் சிரமத்தை மேற்கொண்டு வருகிறார்கள். பொதுமக்கள் மின்சாரமின்றி, குடிநீர் வசதியின்றி இயற்கை உபாதைகளுக்கு இடமின்றி சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், வேளச்சேரி, தரமணி சாலையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அத்தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ஹசன் மவுலானா பார்வையிடச் சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு பெண், தங்கள் பகுதியில் வெள்ள நிவாரணப் பகுதிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி அவரை தடுத்தி நிறுத்தினார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பலரும் ஹசன் மவுலானாவை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமையை சமாளிக்க முடியாத ஹசன் மவுலானா, சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.