ஆரோக்கியமாக பிரஷ் செய்வதற்கு டூத் பிரஷ், டூத் பேஸ்ட் ஆகியவற்றின் தேர்வு மிகவும் முக்கியம். கடைக்குச் சென்றதும் கண்ணில் தட்டுப்படும் பிரஷ், பேஸ்டை வாங்கிப் பயன்படுத்துவது, புதிய புதிய விளம்பரங்களைப் பார்த்து இவற்றைத் தேர்ந்தெடுப்பது எல்லாம் தவறானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

டூத் பிரஷ், பேஸ்ட் எப்படித் தேர்வுசெய்ய வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா:
குழந்தைகளுக்கு அவர்களுக்கென்று விற்பனை செய்யப்படும் டூத் பிரஷ், டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். பெரியவர்களுக்கு மென்மையான (Soft) அல்லது கூடுதல் மென்மையான (Extra Soft) முனைகள் இருக்கும் (Bristles) டூத் பிரஷ்ஷை பயன்படுத்த வேண்டும்.
முனைகளில் இருக்கும் இழைகள் மிகவும் மெல்லியதாக இருப்பதைப் போல உணர்ந்தால் ‘மீடியம்’ (Medium) முனை இருக்கும் பிரஷ்ஷை வாங்கி பயன்படுத்தலாம். கடினமான (Hard) முனைகள் இருக்கும் டூத் பிரஷ்ஷை பயன்படுத்தக்கூடாது. கடினமான முனைகள் இருக்கும் பிரஷ்ஷை பயன்படுத்தி அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்த்தால் ஈறு சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.

நாம் கடைகளில் வாங்கும் பிரஷ் சுற்றப்பட்டிருக்கும் கவரின் ஏதாவது ஒரு மூலையில் Soft, Extra Soft, Medium, Hard என இவற்றில் ஏதாவது ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்து பிரஷ்ஷை தேர்வுசெய்ய வேண்டும்.
டூத் பேஸ்ட் தேர்வு!
பிரஷ்ஷை போலவே டூத் பேஸ்ட் தேர்வும் மிகவும் முக்கியமானது. அடிக்கடி வேறு வேறு டூத் பேஸ்டை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடாது. பொதுவாகவே வயதானவர்களுக்கு ஈறு பிரச்னை, பல் தேய்மானம் போன்ற பிரச்னைகள் அதிகம் காணப்படும். எனவே, கிராம்பு போன்ற இயற்கையான பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும் டூத் பேஸ்டை அவர்கள் பயன்படுத்துவது நல்லது.

அனைத்து டூத் பேஸ்டிலும் குறிப்பிட்ட அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். ஒரு டூத் பேஸ்ட் தயாரிப்பதற்கான முக்கியமான இடுபொருள்களில் உப்பும் ஒன்று. இனிப்பு உள்ள டூத் பேஸ்ட் சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.
பிரஷ் செய்துவிட்டு வாய் கொப்பளித்து துப்பிவிடுவதால் பேஸ்ட் வயிற்றுக்குள் செல்வதற்கு வாய்ப்பில்லை. எனவே அதைப் பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை.

டூத் பேஸ்டில் பற்களை சுத்தப்படுத்துவதற்கான பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும். கூடுதலாக உப்பு சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் உப்பு இருக்கிற டூத் பேஸ்ட்டை உபயோகப்படுத்த வேண்டும் என்றும் எந்த அவசியமும் இல்லை.
முறையாக பிரஷ் செய்வது எப்படி?
காலையில் எழுந்ததும் கண்ணாடியில் பற்களை ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். எங்காவது உணவுத் துகள்கள் சிக்கியிருக்கின்றனவா என்பதைப் பார்க்க வேண்டும். டூத் பேஸ்டை வைப்பதற்கு முன்பாக பிரஷ்ஷை தண்ணீரில் நனைக்க வேண்டும். ஒரு பட்டாணி அளவு டூத் பேஸ்ட் மட்டும் எடுத்தால் போதுமானது.
பேஸ்டை பிரஷ்ஷில் வைத்த பிறகு மீண்டும் பிரஷ்ஷை தண்ணீரில் நனைக்க வேண்டும். அப்போதுதான் பிரஷ் செய்யும்போது டூத் பேஸ்ட் நன்றாக நுரைக்கும். பிரஷ் செய்யும்போது விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல் இடமிருந்து வலமாகவோ வலமிருந்து இடமாகவோ கட்டாயம் பிரஷ் செய்யக்கூடாது.
மேற்பற்களுக்கு மேலிருந்து கீழாக வழிப்பது போலவும் கீழ் பற்களுக்கு கீழிருந்து மேலாக வழிப்பது போலவும் பிரஷ் செய்ய வேண்டும். இந்த முறையில் பிரஷ் செய்ய இயலாத, பிரஷ் நுழையாத இடங்களில் வட்டவடிவ இயக்கத்தில் பிரஷ் செய்யலாம். இதைச் சரியாக செய்தால் 2 நிமிடங்களுக்குள் பிரஷ்ஷிங் முடிந்துவிடும்.

ஒருமுறை பிரஷ் செய்த உடனே டூத்பேஸ்ட்டை எடுத்து மீண்டும் பிரஷ் செய்யக்கூடாது. சரியான முறையில் ஒருமுறை பிரஷ் செய்வதுதான் சரியான பழக்கம். சிலருக்கு உப்பில் தோய்த்து பிரஷ் செய்யும் பழக்கம் இருக்கிறது. இது முற்றிலும் தவறானது. அது பற்களில் உள்ள எனாமலை பாதித்து, பற்கள் தேய்மானத்துக்கும் வழிவகுக்கும். உப்பை பயன்படுத் விரும்பினால் இளஞ்சூட்டிலுள்ள தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கலாம்” என்றார்.