உத்தரப்பிரதேசத்தில் நேற்று இரவு ஒரு குழந்தை உட்பட 8 பேர் காரில் திருமணம் ஒன்றுக்காக சென்று கொண்டிருந்தனர். கார் நைனிடால் நெடுஞ்சாலையில் வந்தபோது போஜ்புரா என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக எதிர் திசையில் வந்த லாரிமீது மோதிக்கொண்டது. இதில் லாரியில் சிக்கிகொண்ட கார், சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டது. இதனால் காரில் தீப்பற்றிக்கொண்டது. காரின் கதவு திறக்க முடியாமல் ஜாமாகிவிட்டது.

எனவே காரில் இருந்தவர்களால் உடனே வெளியில் வரமுடியவில்லை. இதில் ஒரு குழந்தை உட்பட காரில் இருந்த எட்டு பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். காரோடு போதிய லாரியும் தீப்பிடித்துக்கொண்டது. இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவம்:
உத்தரப்பிரதேசத்தில் திருமண சடங்கின்போது அதில் கலந்துகொண்டவர்கள் மீது சுவர் ஒன்று இடிந்து விழுந்துவிட்டது. கோஷி என்ற இடத்தில் திருமணத்திற்கு முந்தைய சடங்குகளில் பெண்கள் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த சுவர் இடிந்து விழுந்து. சுவருக்கு அருகே அதிக அளவு மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. சுவர் இடிந்ததில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மணலுக்குள் சிக்கிக்கொண்டனர். உடனே மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துவிட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் மேலும் 4 பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார்கள். இடிந்து விழுந்த சுவர் சமீபத்தில்தான் கட்டப்பட்டு இருந்தது. இறந்தவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர். இந்த விபத்து தொடர்பாக சுவரை கட்டிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.